தேசம்

'அடுத்த பேருந்து நிறுத்தம் என்ன?': பயணிகளை அலர்ட் செய்யும் புதிய சிஸ்டம் சென்னையில் இன்று அறிமுகம்

காமதேனு

பேருந்துகளில் அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகள் ஸ்பீக்கர் மூலமாகத் தெரிந்துகொள்ளும் வசதி சென்னையில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் சுமார் 6,000 பேருந்துகள் ஜியோ-கோடிங் செய்து, பேருந்து நிறுத்தங்களைக் கண்டறியும் வசதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறைவு பெற்றுவிட்டது. அதன்படி 1000 பேருந்துகளில் அந்த அமைப்புகளை நிறுவும் பணி நடைபெற்றது. இதற்காக ஒவ்வொரு பேருந்துகளிலும் ஆறு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பிறகு படிப்படியாக அனைத்துப் பேருந்துகளுக்கும் இந்த பணிகள் விரிவுபடுத்தப்பட உள்ளது.

புதிதாக ஒரு இடத்திற்குப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்பவர்கள் தான் இறங்க வேண்டிய இடம் குறித்து நடத்துநரையும், சக பயணிகளையும் கேட்டறிந்து இறங்குவார்கள். சில நேரங்களில் அது மற்றவர்களுக்குத் தொந்தரவாக அமையக் கூடும். அந்த சிக்கலைப் போக்கவும், விளம்பரங்களை ஒலிபரப்பி அதன் மூலம் வருமானத்தைப் பெருக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அறிவிக்கப்படும். பேருந்து நிறுத்தத்திற்கு 300 மீட்டர் முன்பாகவே பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்த தகவல் ஒளிபரப்பப்படும். இதன் மூலம் பயணிகள் பேருந்து நிறுத்தத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, சிரமம் இல்லாமல் இறங்க முடியும்.  

SCROLL FOR NEXT