அம்ரித்பால் சிங்
அம்ரித்பால் சிங் அம்ரித்பால் சிங் எப்படி தப்பினார்; 80,000 போலீஸார் என்ன செய்தார்கள்? - பஞ்சாப் அரசிடம் பாய்ந்த நீதிமன்றம்
தேசம்

அம்ரித்பால் சிங் எப்படி தப்பினார்; 80,000 போலீஸார் என்ன செய்தார்கள்? - பஞ்சாப் அரசிடம் பாய்ந்த நீதிமன்றம்

காமதேனு

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை குறித்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இன்று பஞ்சாப் காவல்துறையை கடுமையாக சாடியதுடன், அம்ரித்பால் சிங்குக்கு எதிரான நடவடிக்கையின் நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கூறியுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தொடர்பான வழக்கை விசாரித்த பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம், "உங்களிடம் 80,000 போலீஸார் உள்ளனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். அம்ரித்பால் சிங் எப்படி தப்பினார்?" என்று பஞ்சாப் அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இது மாநில காவல்துறையின் உளவுத்துறையின் தோல்வி என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' உறுப்பினர்களுக்கு எதிராக சனிக்கிழமையன்று பெரும் தேடுதல் வேட்டையை நடத்தியதாகவும், அவரது ஆதரவாளர்கள் 120 பேரை கைது செய்துள்ளதாகவும் பஞ்சாப் போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அம்ரித்பால் சிங் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாபில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவர் மறைந்த காலிஸ்தானி பிரிவினைவாத ஜர்னைல் சிங் பிந்திரன்வாலேவின் சீடர் என்று தன்னை அழைத்துக் கொள்கிறார். அவரது ஆதரவாளர்கள் மத்தியில் "பிந்திரன்வாலே 2.0" என்று அம்ரித்பால் சிங் அழைக்கப்படுகிறார்.

கடந்த மாதம் இவரது உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் அமிர்தசரஸ் புறநகர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித் பால் சிங் முற்றுகையிட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது உதவியாளர் விடுதலை செய்யப்பட்டார்.

கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளிப்படையான ஆதரவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ போன்ற உளவு அமைப்புகளின் ரகசிய ஆதரவும் இந்த அமைப்புக்கு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சனியன்று போலீஸார் அம்ரித்பாலை வளைத்தனர். ஆனால் போலீஸார் பிடியிலிருந்து தப்பிய அவரைத் தேடி பஞ்சாப் போலீஸாரும், மத்திய படைகளும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் தேடி வருகின்றனர்.

இதற்காக இணைய சேவை துண்டிப்பு, எஸ்எம்எஸ் தகவல் பரிமாற்றத்துக்கு தடை உள்ளிட்டவை அங்கு தொடர்கின்றன. இந்த நிலையில் நான்காவது நாளாக அம்ரித்பால் சிங் எதிரான வேட்டை அங்கே தொடர்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT