இஸ்ரோ தலைவர் சோம்நாத் 
தேசம்

ககன்யான் சோதனையில் கடைசி நேரத்தில் எழுந்த பிரச்சினை என்ன? அது எவ்வாறு சரி செய்யப்பட்டது?

காமதேனு

இன்று காலை நடைபெற்ற ககன்யான் சோதனை ஓட்டத்தின்போது, கடைசி நேரத்தில் எழுந்த பிரச்சினை குறித்தும், சடுதியில் அது சரி செய்யப்பட்டது குறித்தும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முன்னோடித் திட்டம் ககன்யான். இந்த விண்வெளித் திட்டத்தின் மூலம், சுமார் 3 இந்தியர்கள் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்புவார்கள். இந்த சோதனை இந்தியாவின் எதிர்காலத் திட்டங்களான, விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைத்தல் மற்றும் நிலவுக்கு மனிதர்களை அனுப்புதல் போன்ற சாதனைகளுக்கு அடித்தளமிடும்.

ககன்யான் விண்கலன்

சந்திரயான் 3 வரையிலான முந்தைய விண்வெளி ஆய்வுகள் அனைத்திலும், ஆளில்லா விண்கலன்களே அனுப்பப்பட்டு வந்தன. முதல்முறையாக ககன்யான் சோதனையில் மனிதர்கள் இடம்பெறுவதால், பல மடங்கு எச்சரிக்கையோடு ககன்யானுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்றாக, விண்கலன் விண்ணுக்கு ஏவப்படும்போது எதிர்பாரா சூழல் காரணமாக அசம்பாவிதம் எழுமெனில், விண்கலத்திலுள்ள விண்வெளி வீரர்கள் பத்திரமாக அதிலிருந்து வெளியேறுவதற்கான சோதனை திட்டமிட்டப்பட்டது. ககன்யான் திட்டத்துக்கான சோதனைகளில் இதுவே முக்கிய கட்டமாகும். இது வெற்றிகரமானால் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் நோக்கம் முழுமை பெறும்.

இந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு ககன்யான் சோதனை ஓட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கிரவுண்ட் கம்ப்யூட்டர் கடைசி நேரத்தில் பொருத்தமற்ற அம்சம் ஒன்றைக் கண்டறித்து எச்சரிக்கை செய்தது. திட்ட இயக்குநர் சிவகுமார் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள் உடனடியாக அவற்றை விரைந்து சரி செய்தனர். அதன் பின்னர் சற்று நேர தாமதத்துக்குப் பின்னர் விண்கலன் ஏவப்பட்டது.

ககன்யான் சோதனையில் வெற்றி

எதிர்பார்த்தவாறே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததம், அதிலிருந்த விண்வெளி வீரர்கள் இருக்கும் பாகம் மட்டும் தனியாகப் பிரிந்தது. பின்னர் பாராசூட் உதவியால் வங்கக்கடலில் பாதிப்பின்றி இறங்கியது. இதன் முடிவாக, ககன்யானின் சோதனையோட்டம் சிறப்பாக நிறைவடைந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். அப்போது அவர், கடைசி நேரத்தில் எழுந்த பிரச்சினை மற்றும் அது சரிசெய்யப்பட்ட விதம் குறித்தும் விளக்கினார்.

SCROLL FOR NEXT