தேசம்

`ஜிஎஸ்டி ஒரு கோடியை செலுத்திவிட்டு லாரியை எடுத்துச் செல்லலாம்'- கார்ப்பரேட் நிறுவனத்துக்கு தமிழக அரசு `செக்'

என்.சன்னாசி

கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து ஜவுளி போன்ற பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக பிற நாடுகளுக்கு செல்கின்றன. துறைமுகம் வழியாக பிற பகுதியில் இருந்தும் மேற்கு மற்றும் தென்மாவட்டத்திற்கு பல்வேறு பொருட்களும் வருகின்றன. இவை தவிர, பிற மாநிலங்களில் இருந்தும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தொழிற்சாலை சார்ந்த பொருட்கள் கன்டெய்னர் லாரிகளில் வருகின்றன. இவ்வாறு மதுரை வழியாக கன்டெய்னர், லாரிகளில் செல்லும் பொருட்களுக்கு முறையாக ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் செலுத்தப்பட்டு இருக்கிறதா என மதுரை வணிகவரித்துறை அதிகாரிகள் நான்கு வழிச்சாலைகளில் தணிக்கை செய்வது வழக்கம்.

இதன்படி, கடந்த 22 நாளுக்கு முன்பு பாண்டிக் கோயில் அருகிலுள்ள டோல்கேட் பகுதியில் வணிகவரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து திருச்செந்தூர் பகுதியில் தனியார் நிலக்கரி தொழிற்சாலைக்கு தேவையான ‘கன்வே பெல்ட் ’ லோல்களை ஏற்றிச் சென்ற 5 சரக்கு லாரிகளை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனர். மேற்கு வங்க கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் இருந்து அனுப்பிய இந்த சரக்கிற்கு தமிழகத்திற்கான உரிய ஜிஎஸ்டி வரியை செலுத்தாமல் மறைத்து இருப்பது தெரிந்தது. ஜிஎஸ்டி, அதற்கான அபராதம் என சுமார் 1.50 கோடி செலுத்த அறிவுறுத்தி சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், அந்நிறுவனத்தினர் நீதிமன்றத்தை அணுகியதால் 5 லாரிகள் ரிங் ரோட்டில் 22 நாளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள், உதவியாளர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வணிக வரித்துறையினரே ஏற்பாடு செய்தும் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வணிகவரித்துறை அதிகாரிகள் கூறுகையில், "மேற்கு வங்க மாநிலத்திலுள்ள கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று, திருச்செந்தூர் பகுதியில் புதிதாக உருவாக்கப்படும் நிலக்கரி தொடர்பான தொழிற் சாலைக்கு தேவையான ‘கன்வேர்பெல்ட்’ களை சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 70 கோடி மதிப்பிலான பெல்ட் லோடுகளை திருச்செந்தூர் நிறுவனத்திற்கு சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி, அந்த நிறுவனத்தில் இருந்து ‘கன்வேர் பெல்ட் ’ லேராடுகளை ஏற்றிச் சென்ற 5 லாரிகளை பாண்டிக் கோயில் அருகே ஆய்வு செய்தோம். தமிழகத்திற்கான ஜிஎஸ்டி வரியை மறைத்து, ஏமாற்றி செல்வது கண்டுபிடித்தோம். ஒவ்வொரு லாரிக்கும் வரி மற்றும் அபராதமாக 30 லட்சம் வரை சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டது.

ஆனாலும், அந்த நிறுவனம் செலுத்த முன்வராமல் நீதிமன்றத்தை அணுகியது. வரி, அபராதத்தை செலுத்த முன்வந்தால் விடுவிக்கப்படும் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்தால் விடுவிக்கப்படும். இதேபோன்று ஏற்கெனவே 31 லோடுகள் சென்றுள்ளது. அது பற்றியும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலும், இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி செலுத்துவதில் கவனம் கொள்வதில்லை. தமிழகம் உட்பட தென்னிந்திய மாநில வரி செலுத்துவதில் அக்கறை காட்டுகிறது" என்றனர்.

SCROLL FOR NEXT