மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை 
தேசம்

`என் மகளைவிட நன்றாக படிப்பதா?'- குளிர்பானத்தில் விஷம் கலந்து மாணவனை கொல்ல முயன்ற மாணவியின் தாய்

காமதேனு

நன்றாக படிக்கும் மாணவனுக்கு அவனோடு கூட படிக்கும் தோழியின் தாய், விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்ததாக மாணவனின் தரப்பில் எழுப்பப்படும் குற்றச்சாட்டு புதுவை மாநிலம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்கால் நேரு நகரில் சர்வைட் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் நேருநகர் ஹவுஸிங் போர்டு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் - மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன் என்பவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த பாலமணிகண்டன் மாலை வீடு திரும்பியதும் அவருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். பால மணிகண்டனிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது தன் கூட படிக்கும் மாணவி ஒருவரின் தாய், பள்ளி பாதுகாவலரிடம் தன்னுடைய தாய் தந்ததாக சொல்லி குளிர்பான பாட்டில் கொடுத்ததாகவும், அதை பாதுகாவலர் தன்னிடம் கொடுத்ததாகவும், அதனை அருந்தியபிறகே தனக்கு மயக்கம், வாந்தி உள்ளிட்டவை வந்ததாகவும் மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.

அவர்கள் இந்த விஷயத்தை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்ல அது வேகமாக பரவி காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கள் மகன் நன்றாக படிப்பவர். வகுப்பில் முதல் மார்க் எடுப்பவர். அதனால் கூட படிக்கும் மாணவி எப்போதும் இந்த மாணவரிடம் சண்டை போட்டு வந்திருக்கிறார். அந்த மாணவிக்கு இவர் மீது கோபம் இருந்திருக்கிறது. அதனால் தான் மாணவியின் தாய் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார் என்பது பெற்றோரின் குற்றச்சாட்டு.

இது குறித்து காரைக்கால் காவல் நிலையம், காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை மாநில கல்வித்துறை அமைச்சர், புதுவை தலைமைச் செயலாளர், துணைநிலை ஆளுநர் ஆகியோர்களுக்கு பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியின் தாய் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தங்கள் மகனுக்கு சிறப்பு மருத்துவக்குழு அமைத்து சிகிச்சை அளிக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

எட்டாம் வகுப்பு மாணவருக்கு அவருடன் கூடப் படிக்கும் மாணவியின் தாய் விஷம் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த விஷயம் புதுவை மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT