தேசம்

`கிரண்குமார் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது'- கேரளத்தை உலுக்கிய விஸ்மயா மரண வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

காமதேனு

வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்னும் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் கேரளத்தையே உலுக்கியது. இச்சம்பவத்தைக் கண்டிக்கும்வகையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானே, ராஜ்பவனில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் இருந்தார்.

இந்நிலையில் விஸ்மயாவின் கணவர் கிரண்குமார் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் தண்டனையை நிறுத்திவைக்க முடியாது என கேரள உயர்நீதிமன்றம் உறுதிபடக் கூறியுள்ளது.

கிரண்குமார்

விஸ்மயாவுக்கும், கேரள மோட்டார் வாகனத்துறையில் உதவி மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிய கிரண்குமாருக்கும் திருமணம் முடிந்து ஓராண்டுகளே ஆகியிருந்தது. திருமணத்தின்போது ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு படித்து வந்தார் விஸ்மயா. திருமணத்தின்போது கிரண்குமாருக்கு ஒன்றேகால் ஏக்கர் நிலம், 100 சவரன் நகைகள், பத்துலட்ச ரூபாயில் கார் என வரதட்சணையாக வாரி இறைத்தனர் விஸ்மயாவின் பெற்றோர். இதில் வரதட்சணையாகத் தனக்குத்தந்த கார் பிடிக்கவில்லை எனவும், அதற்குப்பதிலாக பணமாக வேண்டும் எனவும் வரதட்சணை கொடுமை செய்யத் தொடங்கினார் கிரண்குமார். ஒருகட்டத்தில் வரதட்சணைக் கொடுமையைத் தாங்கமுடியாமல் விஸ்மயா தன் கணவரின் இல்லத்தில் இருக்கும் குளியலறையிலேயே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தன் கணவரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி சிதைந்துபோன தனது முகம் மற்றும் உடல்பகுதிகளை உறவினர்கள் சிலருக்கு விஸ்மயா வாட்ஸ் அப்பில் அனுப்பிவைத்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதே, ஒட்டுமொத்தக் கேரளத்தையும் விஸ்மயா விவகாரத்தைப் பேச வைத்தது. இதேபோல் அவரது தந்தை திரிவிரிகாமன் நாயரிடம், விஸ்மயா இனியும் இந்த வீட்டில் இருக்கமுடியாது என்றும், தான் எப்படியெல்லாம் வரதட்சணைக் கொடுமைக்கு உள்ளாகிறேன் என்பது குறித்து அழுதுகொண்டே பேசும் ஆடியோவும் வைரல் ஆனது. இந்த ஆடியோதான் இவ்வழக்கில் முக்கிய சாட்சியானது.

இதுதொடர்பான வழக்கில் கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.என்.சுஜித், கிரண்குமாருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 12,55,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

கேரள உயர்நீதி மன்றம்

இந்நிலையில் இந்த தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி எர்ணாக்குளத்தில் உள்ள கேரள உயர்நீதிமன்றத்தில் கிரண்குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதிகள் அலெக்சாண்டர் தாமஸ், சோபி தாமஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள் இந்த தண்டனையை நிறுத்திவைக்க முடியாது என மறுத்துவிட்டனர். கேரள மோட்டார் வாகனத்துறையில் ஆய்வாளராக பணி செய்த கிரண்குமார் அந்தப் பதவியில் இருந்து இந்த வரதட்சணை வழக்கினால் முன்னமே நீக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT