கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்  
தேசம்

"அரசு மக்களுக்கா? குடிகாரர்களுக்கா?": டாஸ்மாக்கை அகற்றாததால் வெகுண்டு எழுந்த கிராம மக்கள்!

மு.அஹமது அலி

போடி பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பலமுறை அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அகற்றாததால், டாஸ்மாக் கடைகளை விரைந்து அகற்ற வேண்டும் இல்லையென்றால் மறியலில் ஈடுபடுவோம் என்று போஸ்டர் ஒட்டி எச்சரித்துள்ளனர் கிராம மக்கள்.

தேனி மாவட்டம், மேலசொக்கநாதபுரத்தில் உள்ள ராணிமங்கம்மாள் சாலையில் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. குடிகாரர்கள் குடித்துவிட்டு சாலையில் மயங்கிக் கிடப்பதும், அப்பகுதி மக்களுக்கு இடையூறு செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

டாஸ்மாக் அமைந்துள்ள பகுதிக்கு அருகே உள்ள ரெங்கநாதபுரம் மற்றும் கரட்டுப்பட்டியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், குடிகாரர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இக்கடையை அகற்றக் கோரி இப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், பேரூராட்சி அலுவலகத்திற்கும் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை அகற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று கரட்டுப்பட்டி பொதுமக்கள் சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "தமிழக அரசு மக்களுக்கா? குடிகாரர்களுக்கா?" என்று குறிப்பிட்டு பின்னர், "போடி வட்டம், மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி, ராணி மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ள கடை எண்: 8611, 8516 அரசு மதுபான கடைகளை அகற்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அப்பகுதி மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்" என்று குறிப்பிட்டு, இறுதியாக, "இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி மறியல் செய்வோம்" என்று எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT