தேசம்

`பணிச்சுமை தாங்க முடியவில்லை; அமைதியை நோக்கி செல்கிறேன்'- மாயமான ஊராட்சி செயலாளர் பரபரப்பு கடிதம்

காமதேனு

பணிச் சுமை காரணமாக, மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி செயலாளர் மாயமான சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊனமலை ஊராட்சியின் செயலாளராக பணியாற்றுபவர் ஆறாமுதன் (47). சொந்த ஊரான ஊனமலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஊனமலை பஞ்சாயத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். ஊனமலைக்கு அருகில் இருக்கும் மொறப்பாக்கம் ஊராட்சியில் காலியாக இருக்கும் செயலாளர் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரிடம் மொறப்பாக்கம் ஊராட்சியின் நிர்வாக பொறுப்பைக் கூடுதலாக அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்.

அப்போது, அது மிகப்பெரிய ஊராட்சி. எங்கள் ஊராட்சியையே என்னால் கவனிக்க முடியவில்லை என தட்டிக் கழித்துள்ளார். ஆனால் கூடுதலாக மொறப்பாக்கம் ஊராட்சியில் செயலராகத் தற்காலிகமாக பணியாற்ற வேண்டும் என அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து உள்ளனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊனமலை ஊராட்சிமன்ற செயலாளர் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு மாயமாகியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கூடுதல் பொறுப்பால் அதிக பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருக்கிறேன். அதிகாரிகளின் வற்புறுத்தல் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. நான் எங்குச் செல்கிறேன் எனத் தெரியவில்லை. என்னை யாரும் தேட வேண்டாம். மன அழுத்தம் காரணமாக அமைதியை நோக்கிச் செல்கிறேன்’ எனக் கடிதம் எழுதிவிட்டு மாயமாகி இருக்கிறார். இதுகுறித்து இவருடைய மனைவி மேல்மருவத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT