தேசம்

‘பெரிய மீன்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறது யோகி அரசு!’

காமதேனு

உத்தர பிரதேசத்தின் சுகாதாரத் துறை மற்றும் பொதுப் பணித் துறை ஊழியர்களின் இடமாற்றல் பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், இதில் தொடர்புடைய பெரிய மீன்களைக் காப்பாற்ற யோகி ஆதித்யநாத் அரசு முயற்சிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியிருக்கிறார்.

உத்தர பிரதேச சுகாதாரத் துறையில் இடமாற்றல் நடைமுறையில் தவறுகள் நிகழ்ந்திருப்பதாகவும், அதற்கு உரிய விளக்கமளிக்குமாறும் அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளருக்குத் துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், ஜூலை 4-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவிவகிக்கும் பிரிஜேஷ் பதக், ‘அரசின் இடமாற்றல் கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை’ என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தக் கடிதத்தின் நகல் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, சுகாதாரத் துறையில் நடந்த இடமாற்றல்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொதுப் பணித் துறையின் இடமாற்றலிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்ததையடுத்து, அத்துறை அமைச்சரான ஜிதின் பிரசாதாவின் சிறப்பு அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்து யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அத்துறையைச் சேர்ந்த 5 உயரதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழகம் மற்று கேரளத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் லக்னோவில் நேற்று (ஜூலை 24) நடந்தது. அதில் பேசிய மாயாவதி, “உத்தர பிரதேச அரசுத் துறைகளின் ஒவ்வொரு மட்டத்திலும் நடக்கும் ஊழல் காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். தற்போது, அரசுப் பணிகள் இடமாறுதல் செய்யப்படுவதிலும் ஊழல் விளையாட்டு நடப்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

மேலும், “கட்டாயத்தின் பேரில் வேறு வழியின்றி இதுகுறித்த தகவல்களை உத்தர பிரதேச அரசு வெளியிட்டிருக்கிறது. ஆனால், இந்த விளையாட்டின் பெரிய மீன்களைக் காப்பாற்றவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று மாயாவதி குற்றம்சாட்டினார்.

SCROLL FOR NEXT