தேசம்

3 மாவட்டங்களில் அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகள் அதிகம்: தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

காமதேனு

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவை குறித்த பள்ளிக்கல்வித்துறை ஆணையரின் செயல்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பள்ளிகளில் மாணவர்கள் அடிப்படை வாசிப்பு எழுதும் திறனற்றவர்களாக இருக்கின்றனர். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாதந்தோறும் தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி கல்வித்தரத்தை உயர்த்த சிஇஓக்கள் அறிவுரை வழங்க வேண்டும். அரசுப் பள்ளியில் பெரும்பாலான மாணவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதமே பெறுகின்றனர். அவர்களை 50- 60% வரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.தலைமையாசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் வகுப்புகளில் அவர்கள் பாடம் நடத்துகின்றார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். துவக்க அனுமதி ஆணை பெறப்படாத தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாததை உறுதி செய்ய வேண்டும்.

அரசின் விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் புதுப்பித்து ஆணை அளிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு அனைத்து தனியார் பள்ளிகளும், அவர்களின் கருத்துருக்களை தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழுவிற்கு அனுப்பி கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும். பள்ளி வாரியாக கட்டண தொகையை பதிவேற்றம் செய்து சிஇஓ ஒப்புதல் வழங்க வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை, பயன்படுத்தத்தக்க கழிவறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் விவரங்களை சேகரித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் எளிதாக மனதில் வைத்துக் கொள்ளும் நிலையில் 16 இலக்கத்திற்கு பதிலாக 10 இலக்கமாக EMIS எண் எளிதாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலகங்களும், இடைநிலை, தொடக்க கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் என தனித்தனியாக செயல்பட உள்ளது.

முதல்வரின் தனிப்பிரிவிலும், முதல்வரின் முகவரியிலும் உள்ள மனுக்களையும் விரைந்து முடிக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, போக்சோ தொடர்பான புகார்கள் பெறப்படும் போது எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி போதிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதம் குறைந்தபட்சம் 12 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும். முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மிதிவண்டிகள் வழங்கப்படாமல் உள்ள மாணவர்களுக்கு விரைந்து வழங்க வேண்டும். என்.எஸ்.எஸ் முகாம்கள் அக்டோபர் மாதத்தில் 7 நாட்கள் நடத்தப்பட வேண்டும். மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு காலை அல்லது மாலை வேளையில் கூடுதல் நேரம் ஒதுக்கி பள்ளிகளை பாடம் நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் எந்தெந்த பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெறுகிறார்கள் என்ற காரணம் குறித்து சி.இ.ஓ. ஆய்வு செய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள சிவகங்கை, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT