சீமான்
சீமான் மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கு உதவாது - சீமான்
தேசம்

அரசிடம் ஒரு விமானம் கூட இல்லை, 54 விமான நிலையம் கட்ட எதற்கு அறிவிப்பு?: பட்ஜெட் குறித்து சீமான் சீற்றம்

காமதேனு

மத்திய அரசுக்குச் சொந்தமாக ஒரே ஒரு விமான கூட இல்லாத நிலையில் புதிதாக 54 விமான நிலையங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எந்தவிதமான திட்டங்களும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கை போல இந்த அறிக்கையும் மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.

தனி நபர்களுக்கான வருமான வரி வரம்பை உயர்த்தியது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும் புதிய வரி முறைக்கு மட்டுமே இது பொருந்தும் என கூறியிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். வருமான வரி வரம்பு உயர்வு என்பது புதிய வரிமுறைக்குள் மாத சம்பளதாரர்களைத் தள்ளும் சூழ்ச்சியேயாகும்.

தங்கத்தின் மீதான சுங்க வரியை உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்பதால் இனி தங்கம் வாங்குவது ஏழை மக்களுக்கு பகற்கனவாகவே மாறிவிடும். அத்தோடு தங்கக் கடத்தலுக்கு வழிவகுக்கும்.

கைபேசி மற்றும் மின்னணு இயந்திரங்களுக்கான சுங்கவரியை குறைத்துவிட்டு, எரிபொருள்களுக்கான வரிகளைக் குறைக்காமல் தவிர்த்திருப்பது இந்த நிதிநிலை அறிக்கை ஏழை மக்களுக்கானதல்ல, முழுக்க முழுக்க பெரும் முதலாளிகளுக்கானது என்பதற்கு மேலும் ஒரு சான்றாகும்.

மத்திய அரசுக்குச் சொந்தமாக ஒரே ஒரு விமான கூட இல்லாத நிலையில் புதிதாக 54 விமான நிலையங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையானது. புதிய விமான நிலையங்கள் கட்டித் அதனைத் தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு பதிலாக அதனையும் தனியார் நிறுவனங்களிடமே ஒப்படைக்கலாமே?

மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கு உதவாத மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட்டாக உள்ளது’’ என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT