விபத்தை ஏற்படுத்திய அரசு வாகனம்
விபத்தை ஏற்படுத்திய அரசு வாகனம் 
தேசம்

அரசு ஜீப் மோதி அப்பாவி இளைஞர்கள் இருவர் பலி: டிரைவரை கைது செய்யக்கோரி கொட்டும் மழையில் போராட்டம்

காமதேனு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் இவருர் எதிரே வந்த அரசுத்துறை வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அறந்தாங்கி அருகே கம்பச்சேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜகுரு(23) கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் ரெத்தினம் மகன் ராமு(30). தனியார் பேருந்து நடத்துநர். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் நாகுடியில் இருந்து ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சி பூச்சியியல் துறை அலுவலர் லதா தலைமையிலான அலுவலர்கள் அரசு வாகனத்தில் மணல்மேல்குடியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். நாகுடி கடை வீதி அருகே சென்றபோது இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது அதிகாரிகள் வந்த வாகனம் நேருக்கு நேராக மோதியது.
இதில், ராஜகுரு, ராமு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த நாகுடி போலீஸார் இருவரின் சடலங்களையும் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய அரசு வாகன ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இறந்தவர்களின் உறவினர்கள் நாகுடியில் கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கார் ஓட்டுநரான கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த சஞ்சீவி(50) மீது நாகுடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பின்னர் சுமார் 3 மணி நேரம் நடைபெற்று வந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT