தேசம்

அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சி: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை பதறவைத்த சம்பவம்

காமதேனு

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று முதியவர் உள்பட இருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கந்துவட்டிக் கொடுமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் தற்கொலை சம்பவங்களைக் குறைக்கும் வகையில் திங்கள் கிழமைகளில் அதாவது பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்ட நாளில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் போதிய காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று விக்கிரமசிங்கபுரம் சேரி மெயின் ரோட்டைச் சேர்ந்த 73 வயதான முதியவர் மரியசிங்கம் என்பவர் மண்ணெண்ணெயை மேலே ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீஸார் மண்ணெண்ணெய் கேனே தட்டிவிட்டு, அவர் மேல் தண்ணீர் பாய்ச்சினர். தொடர்ந்து மரியசிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ என் மனைவி நெல்லை ஜங்சன் ரயில்வே ஸ்டேசனில் துப்புரவு பணிசெய்தார். அவர் இறந்துவிட்டார். என் மகன் 14 வருடங்களுக்கு முன்பே வீட்டைவிட்டு மாயமாகிவிட்டார். என் ஒரே மகளும் வீட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளார்.

எங்கள் வீட்டில் ரேசன் அட்டை தொலைந்துவிட்டது. இதனால் தமிழக அரசின் நல்லத்திட்ட உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல், என் மனைவி ரயில்வேயில் வேலை செய்த பண பலன்களும் ரேசன் கார்டு இல்லாததால் கிடைக்கவில்லை. எனக்கு மீண்டும் ரேசன் கார்டு கேட்டு பலமுறை முயற்சித்தும் கிடைக்கவில்லை. அதனால் தீக்குளிக்க முயற்சித்தேன்.”என்றார்.

போலீஸார் மரியசிங்கத்தை சமாதானம் செய்து அனுப்பிவைத்த சிறிதுநேரத்திலேயே, அம்பா சமுத்திரம் அருகில் உள்ள பொத்தை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனக்கு சொந்தமான காலிமனையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக தீக்குளிக்க முயன்றார். அவரது மண் எண்ணெய் பாட்டிலையும் தட்டிவிட்ட போலீஸார், அவர்மேல் தண்ணீர் பாய்ச்சி மீட்டனர்.

சிறு, சிறு பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளை சந்தித்து தீர்வு பெறமுடியாமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் கேன்களுடன் தற்கொலைக்கு முயலும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT