தேசம்

எங்களுக்கு தனி மாநிலம் வேண்டும்: திரிபுரா பழங்குடியினர் டெல்லியில் போராட்டம்!

காமதேனு

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் திரிபுராவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடியினர், தனி மாநிலக் கோரிக்கையுடன் தங்களது இரண்டு நாள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில், திரிபுராவின் அரச குடும்ப வாரிசு பிரத்யோத் மாணிக்ய டெபர்மன் தலைமையில் அவரது கட்சியான திப்ராஹா பழங்குடியின முற்போக்கு பிராந்திய கூட்டணியின் (திப்ரா) உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

திப்ரா, திரிபுராவில் மிகவும் சக்திவாய்ந்த எதிர்க்கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க தோராயமாக இரண்டு மாதங்கள் உள்ளன.

பழங்குடியினருக்கு கூடுதல் சுயாட்சி மற்றும் அரசியல் அதிகாரம் கோரி, கடந்த ஆண்டு முதல் 'கிரேட்டர் திப்ராலாந்து'க்கான கோரிக்கையை அக்கட்சி எழுப்பிவருகிறது.

பழங்குடியினரின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு மற்றும் அரசியல் அரங்கில் உள்ள முக்கிய தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இது குறித்து பேசிய டெபர்மன், "நாங்கள் எந்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை பழங்குடியினருக்கு நீதி மற்றும் அதிக அதிகாரம் வேண்டும். கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லியில் இதேபோன்ற இரண்டு நாள் போராட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இந்த முறையும், 'கிரேட்டர் திப்ராலாந்து' கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எங்கள் கட்சி ஒரு குறிப்பாணையை சமர்ப்பிக்கும்” என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள திரிபுரா சட்டசபை தேர்தலில், திப்ரா கட்சி முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

SCROLL FOR NEXT