கணவருடன் ஆர்த்தி
கணவருடன் ஆர்த்தி 
தேசம்

ஒரு கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர்: பாஜக நிர்வாகி சூர்யா சிவா, மனைவி மீது பரபரப்பு புகார்

காமதேனு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும்,  பாஜக பிரமுகருமான  சூர்யாசிவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாங்கள் குடியிருக்கும் வாடகை வீட்டை காலி செய்ய மறுப்பதோடு,  அதனை அபகரிக்கவும் முயல்கிறார்கள் என வீட்டின் உரிமையாளர் திருச்சி  மாநகர போலீஸாரிடம் பரபரப்பு  புகார் அளித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு திருச்சி சண்முகா நகர் மூன்றாவது குறுக்கு சாலையில் சொந்தமாக உள்ள  ஏபிசி மண்டேசரி பள்ளி மற்றும் வீட்டை   தனது நண்பரின் உறவினரான அத்தினா என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு மூன்று வருட கால வாடகைக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். அத்தினா,  சூர்யா சிவாவின் மனைவி ஆவார்.

அந்த ஒப்பந்தம்  கடந்த 2021-ம் ஆண்டு முடிந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில் கட்டிடத்தையும், வீட்டையும் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று ஆர்த்தி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில் 6 மாத வாடகையும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் பள்ளிக் கட்டிடத்தையும், வீட்டையும் காலி செய்ய முடியாது என்று கூறும் அத்தினா தங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், சூர்யா சிவா தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி  ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தமது  இடத்தையும், சொத்தையும் அபகரிக்க முயல்வதாகவும், அதனால்  தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி ஆர்த்தி இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அத்தினா சூர்யாசிவா மீது புகார் மனுவை அளித்துள்ளார். 

ஏற்கெனவே சூரிய சிவா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது தற்போது சொத்தை அபகரிக்க முயல்வதாக  மீண்டும் ஓர் குற்றச்சாட்டு எழுந்திருப்பது திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT