தேசம்

போலி பாஸ்போர்ட் வழக்கில் விரைவில் விசாரணை தொடங்கும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

கி.மகாராஜன்

மதுரை போலி பாஸ்போர்ட் வழக்கின் விசாரணை கீழ் நீதிமன்றத்தில் விரைவில் தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த முருககணேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: மதுரை அவனியாபுரம் காவல் சரகத்தில் 1.2.2019 முதல் 30.6.2019 வரை 53 இலங்கை அகதிகளுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது கியூ பிராஞ்ச் போலீஸார் 2019-ல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

இதனால் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என 11.2.2021-ல் உத்தரவிட்டது. அதன் பிறகும் விசாரணை முடியவில்லை. அதே நேரத்தில் விசாரணையை முடிக்க 6 மாத அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் கியூ பிராஞ்ச் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் கியூ பிராஞ்ச் ஐஜி சி.ஈஸ்வரமூர்த்தி, மதுரை கியூ பிராஞ்ச் காவல் ஆய்வாளர் ஆர்.கணேஷ்பாபு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், வழக்கில் 41 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேர் மத்திய அரசு ஊழியர்கள் 5 பேர் மாநில அரசு ஊழியர்கள் ஒருவர் பாஸ்போர்ட் அலுவலர். கியூ பிரிவு போலீஸார் கீழ் நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். கீழ் நீதிமன்றத்தில் விசாரணை விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT