தேசம்

தடையை மீறி அபாயகரமான அருவிக்கு குளிக்கச் சென்ற மாணவன்: தவறி விழுந்து பறிபோன உயிர்

காமதேனு

கொடைக்கானலில் அருவியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் நீர் தேக்கம் நிறைந்த ஆழமான பகுதிக்கு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். அபாயகரமானது என்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்ட அருவியில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

தசரா பண்டிகையை முன்னிட்டு கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சுற்றுலாதளங்கள் அனைத்திலும் அதிக கூட்டம் காணப்படுகிறது. கொடைக்கானல் பெருமாள் மலையை அடுத்து பேத்துப்பாறை கிராமம் உள்ளது. இங்குள்ள கணேசபுரம் பகுதியை அடுத்து ஐந்து வீடு நீர்வீழ்ச்சி உள்ளது. இது வனத்துறையால் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடைவிதிக்கப்பட்ட பகுதியாகும்.

ஆனால் பலரும் இதன் ஆபத்தை உணராமல் அவ்வப்போது செல்வது வழக்கமாகவே உள்ளது. ராயுடுபுரம், சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த தினகர் மகன் பிரின்ஸ்(17) உள்பட 6 நண்பர்கள் சேர்ந்து குளிக்கச் சென்றனர். பிரின்ஸ் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். குளிக்கச்சென்ற பிரின்ஸ் தவறுதலாக அருவியின் ஆழமான நீர்பிடிப்புப்பகுதியில் தவறி விழுந்தார். தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர தேடுதல் வேட்டைக்குப் பின்பு மாணவன் பிரின்ஸின் உடலைக் கைப்பற்றினர். ஏற்கெனவே தடை செய்யப்பட்ட ஐந்து வீடு நீர்வீழ்ச்சியில் தடையை மீறி சுற்றுலா வந்து ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாகவும், அந்த அருவிக்குள் செல்லவே முடியாத அளவிற்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

SCROLL FOR NEXT