போக்குவரத்து போலீஸார் வாகன சோதனை
போக்குவரத்து போலீஸார் வாகன சோதனை சாலை விபத்துகள், போக்குவரத்து விதிமீறல்; நவீன கேமரா மூலம் கண்காணிப்பு: 15 நாட்களில் அபராதம்
தேசம்

சாலை விபத்துகள், போக்குவரத்து விதிமீறல்; நவீன கேமரா மூலம் கண்காணிப்பு: 15 நாட்களில் அபராதம்

காமதேனு

சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதி மீறல்களைத் தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் நவீன கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்கும் புதிய திட்டம் குறித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

அரசிதழில் வெளியிடப்பட்ட திட்டம்.

சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளைத் தடுக்கும் வகையில் புதிய திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மின்னணு சாதனத்தைப் பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும். வேகம், தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச்செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், இதர வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்லுதல், ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமீறும் வாகனங்கள் மற்றும்  ஓட்டுநர்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே அபராதம் விதிக்க புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குற்றத்தின் போது வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை ஓட்டவில்லை என்றால், அவர் காவல்துறை அதிகாரி அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் முன், நிரபராதி என்று உரிமை கோரலாம். அவர் ஓட்டுநர் அல்ல என்பதற்கான தகுந்த ஆதாரத்தை வழங்கலாம் எனவும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT