சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர்
சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர்  
தேசம்

அடுத்து கஞ்சா சாப்பிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு குறி: போக்குவரத்து காவல்துறை அதிரடி

காமதேனு

மது அருந்தி வாகனங்கள் ஓட்டுபவர்களை பிடிப்பது போல் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில், அது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் எழுந்தன. இந்நிலையில், அதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பழைய அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது போல் குறிப்பிட்ட விதிமீறல்களில் மீண்டும் ஈடுபடுபவர்களுக்கு இரண்டாவது முறையாக புதிய அபராதத்தொகை அட்டவணையின் படி கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும். உயர்த்தப்பட்ட புதிய அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இனி அதிக விழிப்புடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 12.5% (60 உயிரிழப்புகள்) குறைந்துள்ளது. ஏற்கெனவே அபராதத் தொகை விதிக்கப்பட்டவர்கள் பழைய அபராதத் தொகைக்கான கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. புதிதாக விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கே தற்போது உயர்த்தப்பட்டுள்ள அபராதத் தொகை பொருந்தும். அதேபோல போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமல்லாமல், சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மேல் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் துறையினருக்கும் அபராதம் விதிக்கும் கருவி கொடுத்து அவர்கள் மூலமும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளை பதிவு செய்து அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் செய்த சாலை விதிமீறலை தவிர்த்து வேண்டுமென்றே வேறு ஏதேனும் அபராதம் போக்குவரத்து போலீஸாரால் விதிக்கப்பட்டால், பொதுமக்கள் புகார் அளித்து தவறு நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, வசூலிக்கப்பட்ட அபராதமாகப் பணம் திருப்பி அளிக்கப்படும். டாஸ்மாக் கடைகள் முன்பு போக்குவரத்து போலீஸார் நின்று அபராதம் விதிப்பதும், வசூலிப்பதும் தவறு இல்லை. அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர மது அருந்தி வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை. மது அருந்துபவர்கள் ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்கு பயணிக்க வேண்டுமே தவிர வாகனங்களை ஓட்டிச் செல்லக்கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை பிரெத் அனலைசர் கொண்டு பிடிப்பது போல் கஞ்சா, போதை மாத்திரைகள் போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதற்குண்டான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் அதற்கும் ஒரு தீர்வு காணப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT