தேசம்

பணம் வாங்கி தரிசனம்: தடுத்த காவலர்கள் மீது அர்ச்சகர்கள் தாக்குதல்: திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு

காமதேனு

திருச்செந்தூர் கோயிலில் பணம் வாங்கிக்கொண்டு பக்தர்களை கோயில் அர்ச்சகர்கள் சிலர் விரைவு தரிசனத்திற்கு விட்டனர். இதைக் கண்டித்த காவலர்களை அர்ச்சகர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஐபி தரிசனத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. இதனால் விஐபி தரிசன டிக்கெட் வினியோகமும் இப்போது சட்டப்படி இல்லை. ஆனால் இதை வேலியே பயிரை மேய்வது போல் சில அறநிலையத்துறைப் பணியாளர்கள் பக்தர்களை மணிக்கணக்கில் ஒருபக்கம் காக்க வைத்துக்கொண்டு, இன்னொரு புறத்தில் வசதி படைத்தோரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு விஐபி தரிசன டிக்கெட் நடைபாதையின் வழியே அனுப்பிவைப்பது வழக்கமாகவே நடந்து வருகிறது.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் இணை ஆணையர் குமாரதுரை, கோயில் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்வகையில் கடந்த இருமாதங்களுக்கு முன்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதுவும் வைரலானது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும்வகையில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாமியை தரிசிக்க இலவச தரிசனம், 100 ரூபாய் கட்டணப் பாதை என இருவழியில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அண்மையில் மூத்த குடிமக்கள் தரிசனத்திற்கு செல்லும்வகையில் தனியாக தரிசன பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரிசன பாதையில் முதியோர் அமர்ந்து செல்லும்வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர்கள் சிலர் கையூட்டு பெற்றுக்கொண்டு சிறப்பு தரிசன பாதை வழியாகவும், முதியோர் தரிசன பாதை வழியாகவும் பக்தர்களை அனுப்பியுள்ளனர். இதைப் பார்த்து அங்கு பணிக்கு நின்ற காவலர்கள் சிலர் அர்ச்சகர்களைக் கண்டித்ததோடு, அவர்கள் அனுமதித்த பக்தர்களையும் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்ட பத்துக்கும் அதிகமான அர்ச்சகர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பிலும், புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT