தேசம்

பீரோவில் உரசிய மின்கம்பி; துடிதுடித்து உயிரிழந்த 3 பேர்: வீட்டை காலி செய்தபோது நடந்த துயரம்

காமதேனு

வீட்டை காலி செய்து கொண்டு போவதற்கு முயற்சித்தபோது மின்சாரம் பாய்ந்து மூன்று உயிர்கள் பலியான சோக சம்பவம் தர்மபுரியில் இன்று  நடந்துள்ளது. 

தருமபுரி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன்(52).  இவரது வீட்டின் இரண்டாம் தளத்தில் இலியாஸ் பாஷா(70) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்னும் அதிக வசதிகளுடன் கூடிய வேறு இடத்திற்கு குடிபெயர நினைத்த இலியாஸ் பாஷா பச்சையப்பனிடம்  முறைப்படி கூறிவிட்டு இன்று வீட்டை காலி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

வீட்டில் இருந்த பொருட்களை வாகனத்தில் ஏற்றி புது குடியிருப்புக்கு எடுத்துச் செல்லும் பணியில் இன்று காலை மும்முரமாக  ஈடுபட்டிருந்தார். அப்போது  வீட்டில் இருந்த  இரண்டு  பீரோக்களை கயிறுமூலம் 2-வது மாடியில் இருந்து கீழே இறக்கியுள்ளனர். இந்தப் பணியில் மினி லாரி ஓட்டுநர்  தருமபுரி ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த மணி மகன் கோபி(23), மேளக்கார தெருவைச் சேர்ந்த தாமரைக்கண்ணன்  மகன் குமார்(23) ஆகியோருடன் இலியாஸ் பாஷா மற்றும் வீட்டு உரிமையாளர் பச்சையப்பன் ஆகியோரும் உதவியுள்ளனர். 

வீட்டின் முன்பகுதியில் அமைந்துள்ள மின்பாதைக்கும் கட்டிடத்துக்கும் குறுகிய இடைவெளி மட்டுமே உள்ளது. இந்த இடைவெளியில் முதலில் ஒரு பீரோவை கயிறு மூலம் கீழே இறக்கியுள்ளனர். பின்னர், 2-வது பீரோவை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பீரோ மின் பாதையில் உரசியுள்ளது. இதில், 4 பேர் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில், வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், வாடகைக்கு குடியிருந்த இலியாஸ் பாஷா, ஓட்டுநர்  கோபி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து உயிரிழந்தனர். குமார் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். வீடு காலி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து வீட்டு உரிமையாளர், வாடகைக்கு  குடியிருந்தவர்,  டெம்போ ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT