தேசம்

வாட்ஸ்அப் குழு அட்மின்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்: கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் அதிரடி

காமதேனு

வாட்ஸ் ஆப் குழு அமைத்து கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்களும், காவலர்கள் மீது கண்டறிந்தவரும் போலீஸாரால் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை தொடர்ந்து, கடந்த 17-ம் தேதியன்று பள்ளியில் கலவரம் வெடித்தது. அங்கு திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பள்ளியை சூறையாடி பள்ளியின் உடைமைகள் பேருந்துகள் உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்தனர். இதில் அந்த பள்ளிக்கு ஏராளமான பொருட் சேதம் ஏற்பட்டது. பள்ளியை தாக்கியதோடு மட்டுமில்லாமல் காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன. காவலர்களும் கல்வீசி கடுமையாக தாக்கப்பட்டனர்.

இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸார் வீடியோ ஆதாரங்களைக் கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை இனம் கண்டு கைது செய்து வருகின்றனர். அவ்வகையில் பள்ளியின் கதவை உடைத்தவர், காவல் வாகனத்தை எரித்தவர், கலவரத்தை தூண்டியவர்கள் உள்ளிட்ட பலரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கலவரத்தைத் தூண்டும் வகையில் வாட்ஸ் ஆப் குழுக்களை அமைத்து அதில் உறுப்பினர்களைச் சேர்த்து கலவரம் உருவாகும் விதமான கருத்துக்களைப் பதிவிட்டதாக கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய், கள்ளக்குறிச்சி மாவட்டம் துருவூர் கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி, காச்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் உள்ளிட்ட மூன்று வாட்ஸ் ஆப் குழு அட்மின்கள் நேற்று சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டனர். மற்றும் கலவரத்தின் போது போலீஸார் மீது கற்களை வீசி தாக்கியதாக புது பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரும் நேற்று கைது செய்யப் பட்டார்.

இவர்கள் நான்கு பேரையும் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர்.

கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் கருத்துக்களை பதிவு செய்த வாட்ஸ் அப் குழு அட்மின்கள் உள்ளிட்ட 16 பேர் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, கலவரத்தில் ஈடுபட்டதாக 20 சிறார்கள் உள்ளிட்ட 306 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இதுவரை 322 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT