தேசம்

திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று 5 மணி நேரம் மூடல்: அதன் பின்னால் இருக்கும் ஆன்மிக காரணம் இது தான்!

காமதேனு

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழாவில் ஆராட்டு நிகழ்வு இன்று நடக்கிறது. ஆராட்டிற்காக  சுவாமி விக்கிரகங்கள் விமான ஓடுதளப் பாதை வழியாக செல்லும் என்பதால் இன்று மாலை ஐந்து மணி நேரங்களுக்கு திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையம் மூடப்படுகிறது. 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் பத்து நாள்கள் திருவிழா  நடைபெறும். நடப்பு ஆண்டுக்கான ஐப்பசி திருவிழா இப்போது நடந்துவருகிறது. இதன் ஒருபகுதியாக  சுந்தரவிலாசம் அரண்மனைப் பகுதியில் நேற்று பரிவேட்டை நிகழ்வு நடந்தது. தொடர்ந்து திருவிழாவின் மைய நிகழ்வான ஆராட்டு நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது. இதற்காக கிழக்கே கோட்டையில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட  பத்மநாசுவாமி, நரசிங்க மூர்த்தி, கிருஷ்ணன்  விக்கிரக வாகனங்கள்  ஆராட்டு ஊர்வலமாக கிளம்பும். இந்த ஊர்வலமானது சங்குமுகம் கடற்கரையில் சுவாமி விக்கிரகங்களை நீராட்டி மீண்டும் பத்மநாபசுவாமி கோயிலை வந்தடையும்.  கிழக்கே கோட்டைக்கும், சங்குமுகம் கடற்கரைக்கும் இடைப்பட்ட தொலைவு 5 கிலோ மீட்டர். காலம், காலமாக இந்த ஆராட்டு ஊர்வலம் சென்று வந்த இடத்தில் காலப் போக்கில் விமான நிலையம் வந்து விட, அப்போது முதல் விமானப் போக்குவரத்தையே  நிறுத்தி வைத்து பத்மநாபசுவாமிக்கு மரியாதை கொடுக்கின்றனர்.

விமான சேவையில் மாற்றம்

விமான நிலையத்தின் ஓடுதளம் வழியாக  செல்லும் ஆராட்டு ஊர்வலத்திற்கு  வசதியாக இன்று மாலை 4 மணி முதல்  இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படுகிறது. விமான நிலையம் மூடப்படும் நேரத்தை ஒட்டி பல்வேறு விமான நிறுவனங்களும் தங்கள் சேவை நேரத்தை மாற்றியமைத்திருக்கின்றன. உலகிலேயே கோயில் விசேசத்திற்காக விமான நிலையத்தை 5 மணிநேரம் மூடிவைக்கும் ஒரே நிகழ்வு திருவனந்தபுரத்தில் மட்டுமே நடக்கிறது. 1932-ம் ஆண்டில் இருந்தே ஆராட்டு விழாவுக்கு சாமிகள் ஊர்வலமாக வரும்போது இந்த விமான நிலையம் மூடப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT