தேசம்

புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்த புலி: முதுமலையில் சுற்றுலாப்பயணிகள் குஷி!

ஆர்.டி.சிவசங்கர்

முதுமலையில் ஒரு மணி நேரம் புல்தரையில் விளையாடிய புலியைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பச்சைப் பசேலென காட்சி அளிக்கிறது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடர்ந்து பெய்த மழையால், பசுமை நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், வாகனச் சவாரி மூலம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது கிராஸ்கட் வனப்பகுதி சாலை ஓரத்தில் உள்ள புல்வெளியில், 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று ஒய்யாரமாக சில மணி நேரம் ஓய்வு எடுத்தது. அதன்பின் புல்வெளியில் அங்கும், இங்கும் திரும்பியவாறு சற்று நேரம் சுற்றுலாப் பயணிகளைக் கூர்ந்து நோக்கியது.

இருப்பினும் சுற்றுலாப் பயணிகளைப் பொருட்படுத்தாத அந்த புலி அப்பகுதியில் அமர்ந்திருந்தது. அத்துடன் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்கும்போது போஸ் கொடுத்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து எழுந்து வனப்பகுதிக்குள் நடந்து சென்றது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக காட்சியளித்த அந்த புலியைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

SCROLL FOR NEXT