நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள்
நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள் 
தேசம்

வாரத்தில் 2 நாட்கள் 15 நிமிடம் வழக்கறிஞரை சந்தித்துப் பேசலாம்: நரபலி கும்பலுக்கு அனுமதி!

காமதேனு

கேரள மாநிலம், இலந்தூரில் இருபெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இவ்விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் மூவரும், வாரத்திற்கு இருநாள்கள் வழக்கறிஞரை மட்டும் சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரளாவில் கடவந்தறா பகுதியில் தனியாக வசித்துவந்த, சாலையோர லாட்டரி சீட்டு விற்பனையாளரான  ரோஸ்லி(59) என்ற பெண் திடீரென காணாமல் போனார். கடந்த ஆகஸ்ட் மாதமே இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்  தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணும் திடீரென  காணாமல் போனார். பத்மா எர்ணாகுளத்தில் தங்கியிருந்து கேரள லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்தார். அவரை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டபோது அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவே  ஒலிக்க, கொச்சின் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இரு பெண்கள் மாயமானதும் ஒரேபாணியில் இருந்ததாலும், இருவருமே உடன் யாரும் இல்லாமல் தனிமையில்  லாட்டரி சீட்டு விற்று பிழைப்பு நடத்தும் பெண்கள் என்பதும் இதன் பின்னால் ஏதும் பெரியசதி இருக்குமோ என  கேரள காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் பத்மாவின் செல்போன் சிக்னலை ஆராய்ந்தனர். இதில் அவரது செல்போன் சிக்னல் கடைசியாக திருவல்லா பகுதியில் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில்  ஷிகாப் என்பவருடன் பத்மா செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஷிகாப்பை விசாரித்தபோதுதான் ஷாஜி என்கின்ற முகமது ஷிகாப் அவர்களை பகவல்சிங் வீட்டிற்கு அழைத்துப்போனதும், லைலா, பகவல் சிங், ஷிகாப் மூவரும் சேர்ந்து நரபலி கொடுத்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.

நரபலி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் எர்ணாக்குளம் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆளூர் மூலம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், தங்களை சிறையில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. வழக்கறிஞரை மட்டும் சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினர். இதில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 15 நிமிடங்கள் தங்கள் வழக்கறிஞரை சந்திக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் இவர்கள் மற்றொரு மனுவில், கேரள காவலர்கள் தங்கள் வழக்கில் இஷ்டத்திற்கு ஊடகங்களுக்கு செய்திகளைக் கொடுக்கின்றனர். அவர்கள் அதை வெளியிடுவது தங்கள் கண்ணியத்தையும் கெடுப்பதாகச் சொல்லி அதற்கும் தடை கோரினர். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT