பத்திரம்
பத்திரம் 
தேசம்

பெற்றோரை கவனிக்காத மகன்: பத்திரத்தை ரத்து செய்து சொத்துக்களை மீட்டுக்கொடுத்த சார் ஆட்சியர்!

காமதேனு

தன் பெற்றோரை சரிவரக் கவனிக்காத மகனுக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்து, தாய்க்கு அதை மீண்டும் ஒப்படைத்துள்ளார் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கெளசிக்.

ஒருவர் தன் வாழ்நாளுக்குப் பின்பு தன் சொத்துக்களை குடும்பத்தினருக்கு ஒதுக்குவது உயில் ஆகும். அதேநேரம் தன் வாழ்நாளிலேயே சொத்துக்களை குடும்ப உறவில் இன்னொருவர் பெயருக்கு உரிமைமாற்றம், போக்குவரவு, பட்டா சிட்டா செய்ய சகல உரிமைகளையும் வழங்குவது செட்டிமென்ட் ஆகும். இதை குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கமுடியும். அப்படி வழங்கிய சொத்தை சார் ஆட்சியர் மீட்டு மீண்டும் தாயிடமே வழங்கி உள்ளார்.

குமரி மாவட்டம், குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டபிள்ளை. வயோதிகத்தால் இவர் வீட்டிலேயே முடங்கினார். இவரது மனைவி தங்கமும் நோய்வாய்ப்பட்டவர். இந்தத் தம்பதிகள் வீடு, நிலம் உள்ளிட்ட தங்கள் சொத்துக்களை தங்கள் இரண்டாவது மகனுக்கு செட்டில்மென்ட் எழுதிக்கொடுத்தனர். இந்தநிலையில் சொத்துக்களின் உரிமம், மாறிய பின்பு மகன் பெற்றோரை சரிவரக் கவனிக்கவில்லை. ஒருகட்டத்தில் வீட்டை விட்டும் வெளியேற்ற நீலகண்டபிள்ளையும், தங்கமும் உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தாங்கள் செய்துகொடுத்த செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்துசெய்து தங்கள் சொத்துக்களை மீட்டுத் தரவேண்டும் என பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கெளசிக்கிடம் மனு கொடுத்தனர்.

மூத்தகுடிமக்கள் தீர்ப்பாயத்தில் இதை விசாரணைக்கு எடுத்த சார் ஆட்சியர் கெளசிக் அதில் உண்மைத்தன்மை இருப்பதைக் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து நீலகண்டபிள்ளை, தங்கம் இருவரும் எழுதிக்கொடுத்த செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்துசெய்து அந்த நகலை தம்பதியிடம் வழங்கினார். இதை இனி அனுபவிப்பதில் மகன் சிக்கல் ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT