தேசம்

இடிதாக்கி தந்தையுடன் பலியான புதுமாப்பிள்ளை: 27 நாளில் கணவனை இழந்த இளம்பெண்ணுக்கு வேலை வழங்க கோரிக்கை

காமதேனு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இடி தாக்கி உயிரிழந்த தந்தை,  மகன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு  வேலை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மன்னார்குடி அருகே தளிக்கோட்டை காலனியைச் சேர்ந்தவர் விவசாயி அன்பரசன் (60).  அவரது மகன் அருள்முருகன் (28). கடந்த வாரம் நள்ளிரவில் பெரும் மழை  பெய்ததால்  அன்பரசனும் அவரது மகன் அருள்முருகனும்  நாற்றங்காலுக்குச் சென்று தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட பெரும் இடி மின்னல் தாக்குதலால் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

அவர்களின் குடும்பத்தாரை  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன்  இன்று சந்தித்து  ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் எதிர்பாராத மழைப் பொழிவை விவசாயிகள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.  குறிப்பாக காவிரி டெல்டாவில் திடீர் திடீரென பெரும் இடி மின்னலுடன் பெய்து வருகிறது. இந்த பேரிடரை எதிர்கொண்டு தான் விவசாயிகள் தமிழ்நாட்டுக்கு தேவையான உணவுப் பொருளை உற்பத்தி செய்து வருகிறார்கள்.

அவ்வாறு உழைக்கும் விவசாயிகள் இயற்கை சீற்றத்தால் உயிரிழக்கும்போது குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 

மரணமடைந்த அருள்முருகன் கடந்த 27 நாட்களுக்கு  முன்பு தான்  27 வயது கார்த்திகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது அவர் இளம் விதவை ஆகி கதறி அழுவதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அவரது  எதிர்கால வாழ்க்கைக்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு உள்ளார்.

இடிதாக்கி ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் இறக்கும்போது அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் சென்று சந்தித்து ஆறுதல் கூறி எதிர்காலத்திற்கு அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதை தமிழக அரசு காலம் காலமாக மனிதநேய மரபாகப் பின்பற்றி வருகிறது. அதன் அடிப்படையில்  அமைச்சர், மற்றும் உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்து முதல்வர்  ஆறுதல் கூறுவதோடு, கார்த்திகாவிற்கு தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளித்திட வேண்டும். அத்துடன் அவர்கள்  குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண உதவி வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பாதுகாக்க முதலமைச்சர்  முன்வர வேண்டும்" என்று பி.ஆர்.பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

SCROLL FOR NEXT