தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் அமைகிறது சோழர் அருங்காட்சியகம்!
தேசம்

தஞ்சையில் அமைகிறது சோழர் அருங்காட்சியகம்!

கரு.முத்து

தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தில் உள்ள பேரரசுகளில் மிக மிகப் பழமையானதும்,  பல்வேறு சிறப்புகள் வாய்ந்ததுமான சிறப்பு பெற்றது சோழப் பேரரசு. 2000 வருடங்களுக்கு முன்பு முற்காலச் சோழர்கள் ஆட்சிபுரியத் தொடங்கி, அதிலிருந்து  பதினோராம் நூற்றாண்டு வரையிலும் அவர்களது ஆட்சி பல்வேறு கால கட்டங்களாக தொடர்ந்தது.  முற்கால சோழர்களின் கரிகாலச் சோழனும், பிற்காலச் சோழர்களின் விஜயாலய சோழன், ராஜராஜசோழன்,  ராஜேந்திரசோழன் ஆகியோரும் வரலாற்று சிறப்பு மிக்கவர்களாக திகழ்ந்தார்கள்.

அதிலும் குறிப்பாக ராஜராஜன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் சோழப் பேரரசை இந்தியாவின்  வடபகுதியில் கங்கை வரை விரிவுபடுத்தியும்,  கடல் கடந்து இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை வென்றும் பேரசை விரிவாக்கம் செய்து ஆட்சி புரிந்தனர். 

தமிழ்நாட்டில் தஞ்சை பெரிய கோயில்,  கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு கற்றளிகளை அவர்கள் எழுப்பியிருக்கின்றனர். அவை 1000 ஆண்டுகளை கடந்தும் சோழர்களின் பெருமைகளை உலகுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கரிகாலச் சோழன் எழுப்பிய கல்லணை இத்தனை ஆண்டுகளாக நிலைத்து நின்று தஞ்சை தரணியில் விவசாயத்தை காத்து நிற்கிறது. 

சோழர்களின் நில அளவை முறையும், குடவோலை முறையும், ஆலய பரிபாலன முறைமும்,  வரி வசூல்முறையும்  உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் முன்னோடி திட்டங்களாக பல்வேறு அரசுகள் பின்பற்றி வருகின்றன. 

அத்தகைய சிறப்பு வாய்ந்த சோழர்களின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் விதமாக தஞ்சையில் சோழர்களின் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சோழர்களின் அடையாளமாக கோயில்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் போன்றவை இன்னமும் நிலைத்து நின்று கொண்டிருக்கிறன. பல்வேறு இடங்களில் சோழர் காலத்தில் நாணயங்களும் ஐம்பொன் சிலைகளும் இன்றளவும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து தஞ்சையில் அமைய உள்ள சோழர்களின் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுமானால் அது உலக வரலாற்றுக்கு ஒரு  முன்னோடியாக இருக்கும். 

SCROLL FOR NEXT