வாகனத்தில் காத்திருந்த முதியவரின் சடலம்
வாகனத்தில் காத்திருந்த முதியவரின் சடலம்  
தேசம்

மயானத்திற்கு இந்த பாதையில் போகக்கூடாது: தடுத்து நிறுத்தியதால் 5 மணி நேரம் காத்திருந்த முதியவரின் சடலம்

காமதேனு

இறந்தவரின் உடலை தங்கள் பகுதி வழியாக மயானத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்று ஒரு பிரிவு மக்கள் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக சுமார் ஐந்து மணி நேரம் சாலையிலேயே முதியவரின் உடல் காத்துக் கிடந்த அவலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே வீரமங்கலம் காமராஜர் நகரில் வசித்து வந்த கந்தையா ( 75) என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். நேற்று அவரது உடல் அடக்கம் செய்வதற்காக ஒரு வாகனத்தில் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அவர்கள் வழக்கமாக மயானத்திற்கு கொண்டு செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் வசித்த ஒரு தரப்பினர் மயானத்திற்கு மாற்று வழி உள்ள நிலையில் இந்த வழியாக செல்லக்கூடாது என்று தடுத்தனர்.

ஆனால். முதியவரின் உறவினர்கள் அந்த வழியாகத்தான் கொண்டு செல்வோம் என்று உறுதியாக கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இரு தரப்பினரும் அந்தப் பகுதியில் குவிந்தனர். அதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து கோட்டாட்சியர் சொர்ணராஜ், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் சமரச முடிவு எட்டப்படவில்லை. சுமார் 5 மணி நேரம் இந்த நிலைமை நீடித்தது. அதுவரையிலும் முதியவரின் சடலம் வாகனத்திலேயே நடுரோட்டில் காத்துக் கிடந்தது.

அப்படியும் முடிவு எட்டப்படாத நிலையில் முதியவரின் சடலத்தோடு மூன்று பேர் மட்டும் அந்த வழியாக மயானத்திற்கு செல்ல பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் முதியவரின் சடலம் அந்த வழியாக கொண்டு செல்லப்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அப்பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக இன்று அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT