தேசம்

`கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை விதித்தது செல்லும்'

காமதேனு

"கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை விதித்தது செல்லும்" என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தற்போது ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஆளும் பாஜக அரசு, திடீரென ஒரு உத்தரவை பிறப்பித்தது. மதத்தை அடையாளப்படுத்தும் விதமாக ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் வர தடை விதிக்கப்பட்டது. இந்த தடையால் முஸ்லிம் மாணவிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கு போட்டியாக இந்து மதத்தை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிந்து வர இடைக்கால தடை விதித்தது. இருந்தாலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து சர்ச்சையாக இந்த விவகாரம் இருந்து வருகிறது.

இதனிடையே, ஹஜாப் விவகாரம் தொடரப்பட்ட வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனறு அறிவிக்கப்பட்டது. அதன்படி, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை விதித்தது செல்லும் என்றும் ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசிய விஷயமல்ல என்றும் பள்ளி சீருடை என்பது நியாயமான கட்டுப்பாடாகும் என்றும் அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பை யொட்டி பெங்களூருவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு நகர் முழுவதும் இன்று காலை முதல் வரும் 21-ம் தேதி வரை ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT