தேசம்

டீ 20 ரூபாய்தான்... சர்வீஸ் கட்டணம் 50 ரூபாய்: ஐஆர்சிடிசியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

காமதேனு

சதாப்தி ரயிலில் 20 ரூபாய் கொடுத்து டீ வாங்கி குடித்த பயணியிடம் சர்வீஸ் கட்டணமாக 50 ரூபாய் வசூலித்துள்ளது ஐஆர்சிடிசி. இந்த டீ பில் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் ஐஆர்சிடிசியை வறுத்தெடுத்தனர் நெட்டிசன்கள்.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சதாப்தி ரயிலில் கடந்த 28-ம் தேதி பயணி ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, ரயிலில் டீ ஆர்டர் கொடுத்துள்ளார். டீயை கொடுத்த ரயில்வே ஊழியர், பில்லையும் சேர்ந்து கொடுத்துள்ளார். இந்த பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பயணி, இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, டீ 20 ரூபாய்தான். ஆனால் அதற்காக விதிக்கப்பட்ட சர்வீஸ் கட்டணம் 50 ரூபாய் என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த பீல்லை தனது செல்போனில் போட்டோ எடுத்த பயணி, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், “20 ரூபாய்க்கான டீக்கு 50 ரூபாய் வரி விதிக்கிறார்கள். அற்புதமான கொள்ளையாக இருக்கிறதே” என்று வேதனையுடன் பதிவிட்டிருந்தார். இந்த பதிவைப் பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள், ஐஆர்சிடிசியை வறுத்தெடுத்தனர்.

டீ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில், ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “2018-ம் ஆண்டு விடுக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி, ராஜ்தானி அல்லது சதாப்தி ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முன்பே உணவுகளை முன்பதிவு செய்யாமல் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்தால் அதற்காக 50 ரூபாய் சேவை கட்டணம் செலுத்த வேண்டும். அது ஒரு கப் டீ அல்லது காபிக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், சதாப்தி, ராஜ்தானி ரயில்களில் முதலில் கட்டாய தேர்வாக இருந்த இந்த அறிவிப்பு பின்னர் விருப்ப தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, பயணிகள் விருப்பப்பட்டால் ரயிலில் உணவுகளை வாங்க மறுத்து, டிக்கெட்டுக்கு மட்டும் பணம் செலுத்திக்கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இந்த செயல் ரயில் பயணிகளை அதிரவைத்துள்ளது.

SCROLL FOR NEXT