தமிழக விவசாயிகள்
தமிழக விவசாயிகள் `3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது; சாலைக்கு ஓடிவந்துவிட்டோம்'- டெல்லி சென்றுள்ள தமிழக விவசாயிகள் தகவல்
தேசம்

`3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது; சாலைக்கு ஓடிவந்துவிட்டோம்'- டெல்லி சென்றுள்ள தமிழக விவசாயிகள் தகவல்

காமதேனு

டெல்லியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் நாடெங்கும் பெரும் பீதியை உருவாக்கியுள்ள நிலையில் டெல்லி சென்றுள்ள தமிழக விவசாயிகள், தாங்கள்  பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு குமரி முதல் டெல்லி நாடாளுமன்றம் வரைநீதி கேட்டு நெடும் பயணம் நடத்தியது. அதன்  நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுமையிலிருந்தும்  300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். நேற்று நிறைவு நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர்கள்  டெல்லி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து ரிஷிகேஷ் செல்வதற்காக விவசாயிகள் அனைவரும் பேருந்தில்  ஏறி அமர்ந்திருந்தனர். இந்த நிலையில் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதனால் அங்குள்ள விவசாயிகளுக்கு என்ன ஆனதோ என்ற அச்சம் தமிழ்நாட்டில் உள்ள  அவர்களின்  உறவினர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசியபோது,   "விவசாயிகள் பேருந்தில் இருந்ததால் அவர்கள் நிலநடுக்கத்தை உணரவில்லை. அதனால் அச்சமின்றி அவர்கள் பேருந்தில் பயணித்து  தற்போது ஹரித்துவாரில் கங்கை கரையில் உள்ளனர்.  அனைவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. அனைவரும் பாதுகாப்பாகவும் நலமுடனும் உள்ளனர். 

நானும் சிலரும் ரயில் நிலையம் அருகில் தனியார் விடுதியில் தங்கி உள்ளோம்.  நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போது மூன்று முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு தங்கும் விடுதி மூன்று முறை குலுங்கியது. நாங்கள் உடனடியாக சாலை பகுதிக்கு ஓடிவிட்டோம். பத்து நிமிடங்கள் கழித்து இயல்புநிலை திரும்பியது. நாங்களும்  பாதுகாப்பாக உள்ளோம்" என்று தெரிவித்தார். 

SCROLL FOR NEXT