தேசம்

‘அசத்துகிறது கேரளம்; அடுத்த முறை தமிழகம்!’

காமதேனு

திருவனந்தபுரத்தில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சியைத் துடிப்பான முறையில் நடத்துவதாகக் கேரள அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அடுத்த கூட்டத்தைத் தமிழகத்தில் நடத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

மத்திய உள் துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் இன்று கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய தென் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்க நேற்று (செப்.2) திருவனந்தபுரம் சென்ற முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசினார். அப்போது முல்லை பெரியாறு, சிறுவாணி, நொய்யாறு விவகாரங்கள் குறித்து அவரிடம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்திருக்கிறார்.

அதில், ’மாண்புமிகு ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் நடைபெற்ற 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழ்நாட்டின் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தேன்.

தென் மாநில முதல்வர்களிடம் எனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும், அம்மாநிலங்களுடனான நமது உறவை வலுப்படுத்தவும் இந்தக் கூட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது’ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ‘இந்த நிகழ்ச்சியைத் துடிப்பான முறையில் நடத்திய கேரள அரசுக்கு நன்றி. அடுத்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை நடத்த தமிழகம் கோரிக்கை விடுத்திருக்கிறது. அந்த வாய்ப்பு தமிழகத்துக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்’ என்றும் அவர் அந்த ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, மின்சார சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT