தேசம்

ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவன்: சிறுநீரகங்கள் செயலிழப்பால் உயிருக்கு போராட்டம்: சக மாணவனின் விபரீத செயல்

காமதேனு

கன்னியாகுமரி மாவட்டம், மெதுகும்மல் பகுதியில் குளிர்பானம் குடித்த மாணவனுக்கு இரு சிறுநீரகங்களும் செயல் இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்த மாணவனை போலீஸார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகில் உள்ளது மெதுகும்மல். இங்குள்ள சுனில்-சோபியா தம்பதியின் மூத்த மகன் அஸ்வின். அஸ்வின் குழித்துறை அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். சிலதினங்களுக்கு முன்பு பள்ளியில் வைத்து நண்பகலில் ஒரு மாணவர் அஸ்வினுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அஸ்வினும் வாங்கிக் குடித்துள்ளார். வீட்டிற்குச் சென்றதும் அஸ்வினுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.

இதனைத் தொடந்து சுனில் தன் மகன் அஸ்வினை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தார். அப்போது குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருப்பது தெரியவந்தது. இதனால் மாணவன் அஸ்வினுக்கு குடல், தொண்டை ஆகியவை பாதிக்கப்பட்டது. இரு சிறுநீரகங்களும் செயல் இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அஸ்வின் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டயாலிசிஸ் சிகிச்சை செய்து வருகின்றார்.

பள்ளியில் அஸ்வினை விட வயது மூத்த மாணவர் ஒருவர்தான் அந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார். அஸ்வின் அதைக் குடித்துக் கொண்டு இருக்கும்போதே இன்னொரு மாணவர் வந்து அதைத் தட்டிவிட்டுள்ளார். இதையெல்லாம் குளிர்பானம் குடித்த அன்று மாலை அஸ்வின் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அஸ்வினுக்கு குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்த மாணவனைக் கண்டிபிடிக்கும் முயற்சியில் களியக்காவிளை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT