தேசம்

குறைவான மதிப்பெண்கள் போட்டதால் ஆத்திரம்: ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்!

காமதேனு

மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள் ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் உள்ள கோபிகந்தர் கிராமத்தில் பழங்குடியினருக்கான அரசு உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இந்த தேர்வில் 11 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கணித ஆசிரியர் சுமன்குமார் மற்றும் பள்ளி அலுவலர் சோனேராம் சவுரே ஆகிய இருவரையும் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கினர். அவர்களுடன் சேர்ந்து மற்ற மாணவர்களும் அவர்களைத் தாக்கியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த கோபிகந்தர் காவல்துறையினர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது எனப் பாதிக்கப்பட்ட ஆசிரியர் சுமன் குமார் புகார் அளிக்க மறுத்துவிட்டார். பொதுவாக குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை ஆசிரியர் அடிப்பதும், கண்டிப்பதும் வழக்கம். ஆனால் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களே ஆசிரியர்களை மரத்தில் கட்டி அடித்திக்கிறார்கள். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT