தேசம்

ஆதாரை இணைக்க மக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை: தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை

காமதேனு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை சேர்க்க மக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முதல் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அனைத்து பிரிவு அலுவலகங்களில் உள்ள சிறப்பு முகாம்களில், வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள், தங்கள் மின் இணைப்பு எண்ணை, அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடத்தப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் மின்வாரிய அதிகாரிகள், குறிப்பிட்ட தனியார் நெட் சென்டர்களுக்கு பொதுமக்களை அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் ஒரு இணைப்புக்கு ஆதார் எண்ணை இணைக்க 100 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதற்கு மின்வாரிய ஊழியர்களும் உடந்தையாக இருக்கின்றனர். பல்வேறு மின்வாரிய அலுவலகங்களில் பொதுமக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஆதார் எண்ணை இணைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே, மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உத்தரவுப்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SCROLL FOR NEXT