தேசம்

காரைக்கால் மீனவர்களைத் தாக்கி கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

காமதேனு

வங்கக்கடலில் கோடியக்கரைக்கு அருகே இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தி பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்த தனசீலன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில்  காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் நேற்று முன்தினம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 

நேற்று இரவு  கோடியக்கரை அருகில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நான்கு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தனசேகரன் படகைச் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இரும்பு பைப் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தாக்கியதில் மீனவர்கள் தனசீலன், மணியன், சதீஸ், மாதேஷ், ஐயப்பன், மணிபாலன் அபிலாஷ் ஆகிய ஏழு பேரும் படுகாயம் அடைந்தனர். 

தாக்குதல் நடத்திதோடு மீனவர்களின்  ஃபைபர் படகில்   இருந்த மீன்கள்,  திசைகாட்டும் கருவி, செல்ஃபோன்கள், வலைகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும்  கொள்ளையடித்துச் சென்றனர். 

படுகாயத்துடன் இன்று அதிகாலை கரை திரும்பிய  7 மீனவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சில மீனவர்கள் ஆபத்தான நிலையில்  இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரைக்கால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT