தேசம்

`என்.எல்.சி அனல்மின் நிலைய விபத்துக்களை விசாரிக்க தனி ஆணையம்'- பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

காமதேனு

என்.எல்.சி அனல்மின் நிலைய விபத்துக்களை விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “கடலூரில் உள்ள நெய்வேலி புதிய அனல்மின் நிலையத்தின் அலகு ஒன்றில் நேற்று காலை நடந்த விபத்தில் 4 ஒப்பந்த பணியாளர்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இதில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்த விபத்துக் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக என்.எல்.சி அறிவித்துள்ளது. இங்கு இதுபோன்ற விபத்துகள் நடப்பது இதுமுதல் முறை அல்ல. 2016 முதல் 2020 வரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

2020-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி கொதிகலன் வெடித்து 14 பேர் உயிர் இழந்தனர். அதே ஆண்டில் 5-ம் தேதி கன்வேயர் பெல்டில் தீவிபத்தும், மே 7-ம் தேதி பாய்லர் வெடித்து 5 ஊழியர்களும் உயிர் இழந்தனர். ஒவ்வொருமுறை விபத்து நடக்கும்போதும் நிர்வாகம் அதைத் தனிநபர் தவறாக சித்தரித்து வந்துள்ளதே தவிர மையப் பிரச்சினையை ஆராய்ந்து சரி செய்ததாகத் தெரியவில்லை. விபத்துகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளைத் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டாலும் என்.எல்.சி தர மறுக்கிறது. போதிய பயிற்சியும், தொழில்நுட்ப அனுபவமும் இல்லாத தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் கொதிகலனை இயக்கவும், பராமரிக்கவும் செய்வதுதான் இதற்குக் காரணம். கடைசியில் தனி நபர் மீது என்.எல்.சி நிர்வாகம் பழிபோடுவது எப்படி சரியான அணுகுமுறையாகும்?

வேறு எந்த அனல்மின் நிலையத்திலும் இல்லாதவகையில் என்.எல்.சியில் அதிக விபத்து மற்றும் உயிர் இழப்புகள் நடக்கிறது. இதனால் என்.எல்.சி நிர்வாகம் மீது தமிழக அரசு விசாரணை மேற்கொள்ள தனி ஆணையம் அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT