பகவதி அம்மன் கோயில் குமரியில் மண்டைக்காடு கோயில் திருவிழா: 50 பேர் சேர்ந்து புக் செய்தால் அரசு பேருந்து ரெடி
தேசம்

மண்டைக்காடு அம்மன் கோயில் திருவிழா: 50 பேர் சேர்ந்து புக் செய்தால் அரசு பேருந்து ரெடி

காமதேனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு அம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள் எந்த ஊரில் இருந்தும், 50 பயணிகள் சேர்ந்து புக் செய்தால் மண்டைக்காடு கோயில் விழாவிற்கு சென்றுவிட்டு மீண்டும் அழைத்துவரும் சேவையைப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பெண்களின் சபரிமலை எனப் போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழா வரும் மார்ச் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்துநாள்கள் விழா வெகு விமர்சையாக நடைபெறும். விழாவின் மைய நிகழ்வான ஒடுக்குப் பூஜை 14-ம் தேதி நடக்கிறது. இந்த பத்துநாள்களும் ஏராளமான ஆன்மிக அன்பர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தரிசனத்திற்குச் செல்வார்கள். அதேபோல் இந்த நாள்களில் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுவது வழக்கம்.

இம்முறை புதுமுயற்சியாக வழக்கமான சிறப்புப் பேருந்துகளோடு, குமரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு ஊரில் 50 பயணிகள் மண்டைக்காடு செல்லத் தயாராக இருந்தால், அந்த ஊரில் இருந்தே மண்டைக்காட்டிற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விரும்புபவர்கள் நாகர்கோவில் போக்குவரத்துக் கழகத் துணை மேலாளர் வணிகம் 9487599082 என்ற எண்ணிலும், ராணித்தோட்டம் 2 கிளை மேலாளர் 9487599085, ராணித்தோட்டம் 3 கிளை மேலாளர் 9487599086 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT