தேசம்

துபாயில் இருந்து மைக்ரோ ஓவனில் தங்கம் கடத்தல்: திமுக நிர்வாகி உள்பட 5 பேர் கைது

ரஜினி

சென்னையில் கடத்தல் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைக்காத 'குருவி' உட்பட 3 பேரை கடத்தி விடுதி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த திமுக நிர்வாகி உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 பேரை மீட்டுள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் நூறு அடி சாலையில் உள்ள விடுதி இரு அறைகளில் அலறல் சத்ம் கேட்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது இரண்டு அறைகளில் ஒரு கும்பல் 3 பேரை தாக்கி மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டதுடன் கடத்தல்காரர்கள் 5 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கடத்தப்பட்டவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த்ராஜ்(38) என்பதும் தெரிய வந்தது. 30 ஆயிரத்திற்காக குருவியாக வேலை செய்தது தெரிய வந்தது. மேலும் ஹசன் பாஷா என்பவர் மைக்ரோ ஓவனில் வைத்து மறைத்து கொடுத்த 400 கிராம் தங்கத்தை துபாயில் இருந்து கடந்த 7-ம் தேதி சென்னைக்கு கொண்டு வந்த அவர், அதை உரியவரிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் தனது உறவினர்கள் ஷியாம், மைக்கேல் ராஜ், ஷாம்குமார் மற்றும் வாகன ஓட்டுநர் தாவித் ஆகியோருடன் சேர்ந்து மைக்ரோ ஓவனைப் பிரித்து பார்த்த போது அதில் தங்கம் இல்லாததால் அதை அங்கேயே போட்டுவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள்.

இதையடுத்து 8-ம் தேதி காலை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் ராஜ் வீட்டிற்குச் சென்ற இதயதுல்லா, ரவிகுமார், பாலகன், தினேஷ், நவீன் குமார் உள்ளிட்ட 8 பேர் சென்றுள்ளனர். ஆனந்த்ராஜ் மற்றும் அவரது உறவினர்களான மைக்கேல் ராஜ், ஷாம் குமார் ஆகியோரை அழைத்து மைக்ரோ ஓவன் குறித்து விசாரித்துள்ளனர். பின்னர் அந்த பார்சல் சென்னையில் உள்ள விமல் என்பவரிடம் இருப்பதாக கூறியதன் பேரில் அவர்களை அந்த கும்பல் காரிலேயே சென்னைக்கு அழைத்து வந்துள்ளது. பின்னர் சென்னை திருநகரில் உள்ள வழக்கறிஞர் செல்வம் கூறியதன் அடிப்படையில் ஆனந்த் ராஜ் உள்ளிட்ட மூவரை விடுதியில் வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக ஆனந்த்ராஜ், மைக்கேல் ராஜ் மற்றும் ஷாம் குமார் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் அரும்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இதயதுல்லா (40), பாலகன் (29), ஆற்காடு பகுதியைச் சேர்ந்த திமுக நகர துணைச் செயலாளர் ரவிகுமார் (36), தினேஷ் (28) மற்றும் நவீன் குமார் (25) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குருவியாக செயல்பட்டு தங்கத்தை கடத்தி வந்ததாக கூறப்படும் ஆனந்த் ராஜ் துபாயில் உள்ள ஹசன் பாஷா என்பவரிடம் இருந்து யாருக்காக தங்கத்தை கொண்டு வந்தார் என்பது குறித்தும் அரும்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT