விக்டோரியா நினைவு தூண்
விக்டோரியா நினைவு தூண் 
தேசம்

சிறகை விரி உலகை அறி - 91: பக்கிங்காம் அரண்மனையில் மகாத்மா காந்தியும் நானும்!

சூ.ம.ஜெயசீலன்

வாழ்வில் இனியொரு முறை பார்ப்போமா என தெரியாத பொழுதில் எழுமே ஒரு பேரார்வம் அது என் உடலை ஆக்கிரமித்திருந்தது. கண்கள் அலைந்தன. கால்கள் பரபரத்தன. அரண்மனைக் காவலரை நாடினேன். சுற்றுலாவுக்கு இன்னும் 10 நிமிடங்கள் இருப்பதால், வலது புற வாயிலுக்குச் செல்லவும், பொறுத்திருக்கவும் சொன்னார். சென்றேன். அங்கே காவலர்கள் தற்காலிக கூடாரத்தில் இருந்தார்கள்.

அருகிலிருந்த நினைவுப் பொருட்கள் வாங்கும் கடைக்குள் சென்றேன். அழகோ அழகு. ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை. வெளியில் வந்தேன். கூடார வாசலில் பயணிகள் நின்றார்கள். வரிசையில் நானும் சேர்ந்தேன். ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன. மெட்டல் டிடக்கடரைக் கடந்தேன்.

பக்கிங்காம்

பக்கிங்காம் உள்ளே எனது காலடி

சீருடை அணிந்த அரண்மனை சுற்றுலா வழிகாட்டி வரவேற்றார். “ஒவ்வோர் ஆண்டும் 50 ஆயிரம் விருந்தினர்கள் அரசியைப் பார்க்க அரண்மனைக்கு வருகிறார்கள். கோடைக்காலத்தில் மட்டும் 5 லட்சம் சுற்றுலா பயணிகள் அரண்மனையைப் பார்க்க வருகிறார்கள்” என்று புன்னகைத்தார். “நிழற்படம் மற்றும் காணொளி எடுக்க அனுமதி இல்லை” என்றார். கண்கள் கொள்ள முடியாதபடி, ஜொலித்துக் கொண்டிருந்த அரண்மனை குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

பக்கிங்காம் அரண்மனை

“பக்கிங்காம் அரண்மனையில் 775 அறைகள் இருக்கின்றன. அதில், வரவேற்பு அறைகள் 19 (State Rooms), அரச குடும்பத்தினர் மற்றும் விருந்தினருக்கான படுக்கை அறைகள் 52, அலுவலகங்கள் 92, குளியலறைகள் 78. மொத்தம் 760 ஜன்னல்கள், 1514 கதவுகள் இருக்கின்றன. தோட்ட பரப்பளவு 16 ஹெக்டர். அனைத்து நிகழ்வுகளையும் மிகவும் துல்லியமாகச் செய்வதற்கு பயிற்சி பெற்ற எண்ணற்ற பணியாளர்களும், அதிகாரிகளும் இங்கே தங்கியிருக்கிறார்கள்” என்றார். உண்மைதான், 70 ஆண்டுகளுக்குப் பிறகு அரண்மனையில் முதன் முறையாக அரசி ஒருவரின் மரணம் 2022-ல் நிகழ்ந்தபோது, உலகத் தலைவர்களை வரவேற்றது முதல், அரசியை நல்லடக்கம் செய்யும் சடங்குகள் வரை அனைத்தையும் துல்லியமாகச் செய்ததை உலகமே கண்டது.

பிரமாண்ட மாடிப்படி

காந்தி நடந்த மாடிப்படி

ஓர் அறையின் மையத்தில் பிரமாண்டமான மாடிப்படியைப் (Grand Staircase) பார்த்தேன். உதாரணமாக, நமது வீட்டில் வடக்கு திசையிலிருந்து படி ஏறத் தொடங்கினால் தெற்கு திசை சுவரில் இரண்டாவது மாடியில் படி முடியும். அல்லது, வடக்கு திசையிலிருந்து புறப்பட்டு, தெற்கு திசை சுவருக்கு அருகில் நின்று, கிழக்கிலோ அல்லது மேற்கிலோ மறுபடியும் படியேறுவோம். இங்கே அப்படியில்லை. வடக்கிலிருந்து வலப்பக்கமாக அல்லது இடப்பக்கமாக மேல் நோக்கி ஏறத் தொடங்கி, தெற்கு சுவருக்கு அருகில் சென்று, மறுபடியும் சுற்றிக்கொண்டு வடக்கு திசை மாடிக்குச் செல்லுவதுபோல உள்ளது. அரசர் 4-ம் ஜார்ஜ் கேட்டுக்கொண்டதால், வடிவமைப்பாளர் நாஷ் வடிவமைத்த படிக்கட்டு இது.

அப்போதிருந்தே அரசர்கள், அரசிகள், நாட்டின் தலைவர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முக்கிய விருந்தினர்கள் இந்த படியில் நடந்திருக்கிறார்கள். 1931-ல் அரசர் 5-ம் ஜார்ஜ் உடன் தேநீர் விருந்தில் பங்கேற்ற மகாத்மா காந்தியும் நடந்திருக்கிறார். அதே படியில், வரலாற்றின் பக்கங்களில் நானும் நடந்தேன். சிப்பு நிற கார்பெட், வெள்ளை நிறமும் தங்க நிறமும் அடுத்தடுத்து பூசப்பட்ட கைப்பிடி மற்றும் சுவர், படிகளைச் சுற்றி சுவரில் தொங்கிய ஓவியங்கள் ஈர்த்தன.

வெளிநாட்டு தூதர்களைச் சந்திக்கும் அறை

பச்சை நிற வரவேற்பறைக்குச் (The Green Drawing Room)  சென்றோம். சுவர், இருக்கைகள், திரைச்சீலைகள், அலங்கார வளைவுகள் அனைத்தும் வெவ்வேறு பச்சை நிறங்களில் மின்னின. 1834 காலகட்டத்தில், பிரிட்டிஷ் அரசாட்சியில் மிகவும் ஏழையாக இருந்த பகுதிகளுள் ஒன்று அயர்லாந்து. அந்த மக்களுக்கு வேலை கொடுக்கவும் அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தவும் அரசி அடிலெய்ட் விரும்பினார். இந்த அறைக்கு தேவையான ஒளிரும் பச்சை பட்டுத் துணிகளை அயர்லாந்தில் நெய்வதற்கு ஆணை பிறப்பித்தார். தொடுவதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை. கண்களால் தழுவிக்கொண்டேன்.

பச்சை அறை

“வெளிநாடுகளுக்கு நியமிக்கப்படும் பிரிட்டிஷ் தூதவர்கள் பொறுப்பு எடுப்பதற்கு முன்பாக அரசியை சந்திக்கும் நிகழ்வு இந்த அறையில் நடைபெறும். வெளிநாட்டு தொடர்புகளின் முக்கியத்துவத்தையும், நாடுகளுடனான தனது நீண்ட நெடிய அனுபவங்களையும் அரசி பகிர்ந்து கொள்வார். அதேபோல, லண்டனில் இருக்கும் பிற நாட்டு தூதர்கள், உயர் ஆணையர்கள் என ஏறக்குறைய 130க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஆண்டுதோறும் இந்த அறையில் அரசியைச் சந்திப்பார்கள். அவரவர் நாட்டு கலாச்சார உடைகளை அணிய அனுமதி உண்டு. பார்க்கவே பரவசமாக இருக்கும்” என்றார் வழிகாட்டி. குழுவில் இருந்த பல நாட்டு பயணிகளாகிய நாங்கள் புன்னகைத்தோம்.

சிம்மாசன அறை

அரியணை அறை

அரியணை அறைக்குச் (The Throne Room) சென்றோம். நாஷ் வடிவமைத்த அறைகளுள் இதுவும் ஒன்று. அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் இருவருக்கான 2 சிம்மாசனங்கள் இருக்கின்றன. ஒரே ஒருமுறை, இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவின்போது மட்டுமே, 1953-இல் இந்த சிம்மாசனங்கள் பயன்படுத்தப்பட்டன.

நாட்டிய மண்டபம்

நாட்டிய மண்டபம்

நாட்டிய மண்டபத்துக்குள் சென்றோம் (Ballroom). அரசி விக்டோரியா மற்றும் இளவரசர் ஆல்பர்ட் இருவருக்கும் விருப்பமான அறை இது. தொடக்கத்தில், 200 மெழுகுதிரிகளின் வெளிச்சத்தில் விருந்தினர்கள் நடனமாடி உள்ளார்கள். அதன் வெப்பம், புகை, ஆடைகளில் வடியும் மெழுகு எதைப்பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ந்து திளைத்துள்ளார்கள். தற்போது, பிற நாட்டு அதிபர்கள் அரசியைச் சந்திக்க வரும்போது, அவர்களுக்கான விருந்து இந்த அறையில்தான் நடக்கிறது. தனிநபர் வீரதீர செயல்கள் மற்றும் நாட்டுக்காக சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இந்த அறையில் நடக்கும். அறையை வியந்து பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பணிப்பெண் சொன்னார், “அரசியை நாங்களே எப்போதாவதுதான் பார்ப்போம். தேவதைபோல் இருப்பார்கள். அரசியைப் பார்க்கும் நாள் எங்களுக்கு திருநாள்தான்.”

எதிர்பாராத நினைவு பரிசு

அரண்மனையை பெரிதாக்க அரசர் 4-ம் ஜார்ஜ் முடிவெடுத்தபோதே, ஓவியங்களையும் கலை சேகரிப்புகளையும் பாதுகாக்க கலைக்கூடம் அமைக்கத் திட்டமிட்டிருந்தார். நாங்கள் கலைக்கூடத்தில் நடந்தோம். கண்ணாடி கூரையில் பாயும் சூரிய வெளிச்சத்தில் மின்னும் ஓவியங்களை மலைப்புடன் பார்த்தோம். மேலும் சில அறைகளைப் பார்த்துவிட்டு நினைவு பொருட்கள் வாங்கும் அறைக்குள் சென்றோம். அரண்மனை இலச்சினை உள்ள தேநீர் குவளை வாங்கினேன்.

பக்கிங்காம் கலைக்கூடம்

வெளியேற கதவருகே சென்றபோது, வாயிற் காவலர் வழுவழுப்பான நெகிழி பை கொடுத்தார். உள்ளே, “பக்கிங்காம் அரண்மனையின் அதிகாரப்பூர்வ நினைவு பரிசு” என்கிற புத்தகம் இருந்தது. அரண்மனை மற்றும் நாங்கள் பார்த்த அறைகளின் வரலாறு, அரச குடும்பத்தின் வாழ்வியல், அரண்மனையின் நிகழ்வுகள் குறித்து மேலும் புரிந்துகொள்ள உதவியது. அரசி விக்டோரியா காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தின் கதவைத் திறந்தார்கள். இரும்பு வாயிலுக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். இடைப்பட்ட அந்த இடத்தில்தான், காவலர்கள் பணி மாறுதல் தினமும் நடக்கிறது.

காவலர்கள் பணி மாறுதல்

கரடி தோலில் செய்யப்படும் தொப்பியும் (Bearskin hats) சிவப்பு மேலாடையும் அணிந்து காவலர்கள் பணி மாறுதல், சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் நிகழ்வாகும். 1660-ம் ஆண்டிலிருந்து செய்ன்ட் ஜேம்ஸ் அரண்மனையை காவலர்கள் பாதுகாக்கிறார்கள். 1837-ல், பக்கிங்காம் அரண்மனைக்கு அரசி விக்டோரியா மாறியவுடன் காவலர்கள் பணி மாறும் நடைமுறை தொடங்கியது.

அரண்மனை வளாகம்

(1) செய்ன்ட் ஜேம்ஸ் அரண்மனை, (2) பக்கிங்காம் அரண்மனை, (3) வெல்லிங்டன் படைவீடு இருக்கும் இடத்தை வரைபடத்தில் பாருங்கள். காவலர்களின் ஒரு பிரிவினர் ஜேம்ஸ் அரண்மனையிலும் மற்றொரு பிரிவு பக்கிங்காம் அரண்மனையிலும் காவல் காப்பார்கள். மற்ற காவலர்கள் வெல்லிங்டன் படைவீட்டில் ஓய்வெடுப்பார்கள்.

ஜேம்ஸ் அரண்மனையில் பணியில் உள்ள காவலர்கள் காலை 10:30க்கு தயாராவார்கள். பக்கிங்காமில் பணியில் உள்ள காவலர்கள் 10:32க்கு தயாராவார்கள். புதிதாக பொறுப்பு எடுக்க இருக்கும் காவலர்கள் வெல்லிங்டனில் 10:35க்கு தயாராவார்கள். பிறகு, ஜேம்ஸ் அரண்மனையில் இசைக் குழுவினர் அணியமாவர்.

அடுத்ததாக, ஜேம்ஸ் அரண்மனையிலிருந்து காவலர்கள் புறப்பட்டு, பக்கிங்காமில் பணியில் உள்ள காவலர்களுடன் ஒன்று சேர்வார்கள். பொறுப்பெடுக்க இருக்கும் காவலர்கள் வெல்லிங்டனில் இருந்து புறப்பட்டு, பக்கிங்காம் அரண்மனை வளாகத்துக்குள் நுழைந்து, ஏற்கெனவே பணியில் இருக்கும் காவலர்களுக்கு எதிரே நிற்பார்கள்.

புதிய அணியின் தலைவரும் பழைய அணியின் தலைவரும் முன் வருவர். பழைய அணி தலைவர், புதிய அணி தலைவருடன் இடது கையை குலுக்குவார். அரண்மனையின் சாவி ஒப்படைக்கப்படும் அடையாள நிகழ்வு இது. பிறகு, ஓர் அணியினர் பக்கிங்காமில் பொறுப்பேற்பார்கள். மற்றோர் அணியினர் ஜேம்ஸ் அரண்மனைக்குச் செல்வார்கள். பணி முடித்த வீரர்கள் வெல்லிங்டன் திரும்புவார்கள். 

விக்டோரியா நினைவுத் தூண் அருகே

விக்டோரியா நினைவுத் தூண்

அணிவகுப்பு பாதையையும் இரும்பு வாயிலையும் கடந்து வெளியில் வந்தேன். அரண்மனையின் முகப்பில் அரசி விக்டோரியா நினைவுத் தூண் உள்ளது. இது, இத்தாலியின் கராராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 2300 டன் வெள்ளை மார்பிளால் கட்டப்பட்டதாகும். உயரம் 25 மீட்டர். விக்டோரியாவின் சிலையும் துணிவு, வெற்றி, கருணை, உண்மை, மற்றும் தாய்மை உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் சிலைகளும் உள்ளன. படமெடுத்தேன். கைப்பிடியில் அமர்ந்து சற்று இளைப்பாறினேன்.

(பாதை விரியும்)

SCROLL FOR NEXT