ஸ்வாதி மாலிவால்
ஸ்வாதி மாலிவால் 
தேசம்

மகளிர் ஆணையத் தலைவிக்கு பாலியல் துன்புறுத்தல்; 22 நிமிடங்களில் கைது செய்யப்பட்ட டிரைவர்: நடந்தது என்ன?

ஆர். ஷபிமுன்னா

டெல்லி மகளிர் ஆணையத்தலைவியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அன்று என்ன நடந்தது என்பது குறித்து ஆணையத்தலைவி ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் தனியாக டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு சோதனையை நடத்தி உள்ளார். அப்போது, காரில் வந்த ஓட்டுநர், ஸ்வாதி யார் என்பதை அறியாமல் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தின் ஒருபகுதி தனது சகஅலுவலரால், வீடியோவாகவும் பதிவுசெய்யப்பட்டு ஸ்வாதியால் வெளியிடப்பட்டுள்ளது. இது, சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இதில் டெல்லி காவல்துறையின் பெண்கள் பாதுகாப்பு எண்ணை தொடர்புகொண்டு ஸ்வாதி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து 22 நிமிடங்களில் அந்த ஓட்டுநரை டெல்லி போலீஸார் உடனடியாகக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அவர் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த அவர் ஹரிஷ் சந்திரா(47) எனத் தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது அந்த ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததும் மருத்துவப் பரிசோதனையில் தெரிந்துள்ளது. அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ஸ்வாதியை மானபங்கம் மற்றும் அவரை உள்நோக்கத்துடன் காயப்படுத்தியது ஆகிய வழக்குகள் பதிவாகி விசாரணை நடைபெறுகிறது.

இது குறித்து மகளிர் ஆணியத் தலைவர் ஸ்வாதி கூறுகையில், "ஜனவரி 1 சம்பவத்திற்கு பின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறுவதை உண்மையா என சோதிக்க நானே களம் இறங்கினேன். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது அதன் வழியில் சென்ற பல வாகனங்கள் நின்று என் மீது தவறானப் பார்வை செலுத்திச் சென்றனர். பலூனாவில் வந்த ஒரு கார் ஓட்டுநர் என்னை தன்னுடன் வருமாறு தவறான நோக்கத்தில் வலியுறுத்தி அழைத்து மானபங்கப்படுத்தினார். நான் பலமுறை மறுத்தும் அவர் தன் காரைத் திருப்பி கொண்டு வந்து மீண்டும் நிறுத்தி என்னை வலியுறுத்தி அழைத்தார். இதனால், அவரைப் பிடிக்க நான் அருகில் சென்ற போது, எனது கை காரின் கண்ணாடியில் சிக்கிய நிலையிலும் வாகனத்தை நிறுத்தாமல் சுமார் 15 மீட்டர் ஓட்டிச் சென்றார். இதில் கடவுள்தான் என்னைக் காப்பாற்றி உள்ளார். ஒரு மாநிலத்தின் மகளிர் ஆணையத் தலைவரான எனக்கே பாதுகாப்பு இல்லை எனும் போது, டெல்லியின் சூழலைப் புரிந்து கொள்ளலாம் ’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு தினமான ஜன.1-ம் தேதியன்று கஞ்வாலா பாகுதியின் சாலையில் சில இளைஞர்களால் ஓட்டிச் செல்லப்பட்ட வாகனத்தின் அடியில் 20 வயது இளம்பெண் சிக்கினார். அவரது அலறலையும் பொருட்படுத்தாமல், சுமார் 15 கி.மீ தொலைவு வாகனத்தால் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால், படுகாயமடைந்த அந்த இளம்பெண் பரிதாபமாக பலியானர். இச்சம்பவத்தில் பெரும் போராட்டத்திற்குப் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதன் பிறகு டெல்லி காவல்துறை அளித்த உறுதிமொழிக்கு பின், மகளிர் ஆணையத் தலைவியான ஸ்வாதி இந்த பெண்கள் பாதுகாப்பு சோதனையை நடத்தி இருந்தார். இதில் அவருக்கே பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT