செல்போன் பறிப்பு
செல்போன் பறிப்பு சென்னையை அதிரவைத்த தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்கள்
தேசம்

சென்னையை அதிரவைத்த தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்கள்: தேடுதல் வேட்டையை முடுக்கிய போலீஸார்

காமதேனு

சென்னையில் நேற்று இரவு ஒரு மணிநேரத்தில் நடைபெற்ற 6 செல்போன் பறிப்பு சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓரே கும்பல் இந்த தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் ராஜ்(21). இவர் கே.கே நகர் ஆற்காடு சாலையில் உள்ள சோமேட்டோ கிடங்கில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு 9.35 மணியளவில் பிரசாந்த் வீட்டிலிருந்து புறப்பட்டு, வேலைக்கு நடந்து சென்றுள்ளார்.. கே.கே நகர் ராஜமன்னார் சாலை சிவன் பார்க் அருகே வரும் போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த அடையாளம் தெரியாத இருவர் பிரசாந்த் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்..

இதேபோல முகப்பேரில் வசித்து வரும் ஆந்திராவை சேர்ந்தவர் ராமலிங்க சாஸ்திரி(59). வீடுகளில் வாஸ்து பார்க்கும் தொழில் செய்து வரும் இவர் நேற்று இரவு கே.கே நகரில் ஓரு வீட்டில் வாஸ்து பார்த்து விட்டு சாலிகிராமம் 80 அடி சாலையில் 9.45 மணியளவில் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடினார்கள்.

இதே போல் அசோக் நகர் தம்பையா தெருவில் வேலை முடிந்து நடந்து சென்ற மருத்துவமனை பெண் ஊழியர் ரேகா(28) என்ற பெண்ணிடம் பைக்கில் வந்த இருவர் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். மேலும், அசோக் நகர் மகாதேவன் தெரு, மாம்பலம் தண்டபாணி தெரு உள்பட 6 இடங்களில் நடந்த தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். செல்போனை பறிக்கொடுத்த பொதுமக்கள் கே.கே நகர், அசோக் நகர், தி.நகர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மாம்பலத்தில் 8.45 மணிக்கு செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அதனை தொடர்ந்து, அசோக், கே.கே நகர் வரை 9.45 மணிக்குள் அடுத்தடுத்து செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. மேலும் அனைத்து செல்போன் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு மணி நேரத்தில் தொடர்ச்சியாக 6 இடங்களில் நடைபெற்ற செல்போன் பறிப்பு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT