நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத் மேடையில் சந்திக்கிறேன்... முதல்வருக்கு நன்றி: நாஞ்சில் சம்பத் ட்விட்!
தேசம்

`முதல்வரின் தனிக்கருணையால் இன்று புதிதாகப் பிறந்தேன்'- நாஞ்சில் சம்பத் உருக்கம்!

காமதேனு

உடல்நலக் குறைவால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நாஞ்சில் சம்பத் நலம்பெற்று வருவதாகவும், விரைவில் மேடையில் சந்திப்பதாகவும் ட்விட் செய்துள்ளார்.

திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் திடீர் உடல்நலக்குறைவினால் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவின்றி அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இப்போது அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகிறார்.

அரசியல், இலக்கிய மேடைகளையும் தாண்டி சினிமாவிலும் நடிகராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். அண்மையில் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா முதன்மைப் பாத்திரம் ஏற்றுநடித்த 'செம்பி' படத்திலும் அரசியல்வாதியாக நடித்திருந்தார். இவரது திருமணம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நடந்தது. திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்று மதிமுகவைத் தொடங்கிய போது, அதில் இணைந்து மதிமுகவின் பிரச்சார பீரங்கியாக வலம்வந்தார்.

தொடர்ந்து மதிமுகவில் இருந்து அதிமுக, அதன் பின் அமமுக, பின்பு திமுக மேடைகளில் இப்போது திராவிட இயக்கப் பேச்சாளராக பேசிவருகிறார் நாஞ்சில் சம்பத். இவர் அதிமுகவில் இருந்தபோதும், ஒருமுறை மூளையில் நரம்பு வெடித்து சுயநினைவின்றி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் சேர்ந்தார். இதுகுறித்துத் தெரியவந்ததும் ஜெயலலிதா அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறச் செய்தார்.

இந்தநிலையில் நாஞ்சில் சம்பத் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரது உறவினர்கள் அவரை நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நாஞ்சில் சம்பத் மெல்ல தேறிவருகிறார். இப்போது அவருக்கு சுயநினைவும் திரும்பியுள்ளது. சிகிச்சையில் இருக்கும் நாஞ்சில் சம்பத்தை அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினரும் நேரில் சந்தித்து நலம்விசாரித்தனர். இதனிடையே இன்று ட்விட்டரில் நாஞ்சில் சம்பத் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “முதல்வரின் தனிக்கருணையால் இன்று புதிதாகப் பிறந்தேன். முதல்வரின் பரிவு, பாசத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக சிகிச்சையில் இருக்கும் நாஞ்சில் சம்பத்தின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசி இருந்தார். மருத்துவமனையிலும் உரிய சிகிச்சை வழங்க அறிவுறுத்தியிருந்தார்.

SCROLL FOR NEXT