தேசம்

பிடிஓ வீட்டில் 10 லட்சம் மதிப்பிலான நகை, பணம், லேப்டாப் திருட்டு: சிசிடிவி ஹார்டு டிஸ்கையும் கழட்டிச் சென்ற கொள்ளையர்கள்

காமதேனு

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 10 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்மக்கும்பல் கொள்ளையடித்தனர். அத்துடன் போலீஸிடம் சிக்காமல் இருக்க அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆலங்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் திருமலை முருகன்(51). இவர் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ளார். இவரது மனைவி தபால்நிலையத்தில் ஊழியராக உள்ளார். ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை வீராணத்தில் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு திருமலை முருகன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

இன்று காலையில் வீட்டிற்கு வந்தபோது மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து 18 பவுன் தங்கநகைகள், 1.60 லட்சம் பணம், இரு லேப்டாப்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. வீட்டிற்குள் புகுந்த கும்பல் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே குதித்துள்ளனர்.

தொடர்ந்து முன்பகுதியில் இருந்த கேமராக்களை வேறு, வேறு திசையில் திருப்பிவைத்துவிட்டு இந்த மர்மக்கும்பல் உள்ளே கதவை உடைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து நகைகளைத் திருடிவிட்டு அந்தக் கும்பல் சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் இருக்கும் ஹார்டு டிஸ்கையும் கொள்ளையடித்துச் சென்றது. இதனால் இந்த கும்பல் தொழில் நுட்ப ரீதியாகவும் நன்கு திட்டமிட்டே இந்தத் திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது தெரியவந்தது. இதனால் ஆலங்குளம் போலீஸார் அருகாமை வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT