தேசம்

மசூதி, கோயில்களில் 11,000 ஒலிபெருக்கிகள் அகற்றம்: உபி முதல்வர் யோகி அதிரடி

ஆர். ஷபிமுன்னா

கடந்த மாதம் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில மசூதிகளின் ’அஸான்’ எனும் பாங்கு முழக்கத்திற்கான ஒலிபெருக்கிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. மெல்ல, வேறுசில மாநிலங்களிலும் பரவியதில், உத்தர பிரதேச அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளன. இங்கு ஆளும் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில், மசூதிகள், கோயில்கள், குருத்துவாராக்கள் உள்ளிட்ட அனைத்து மத தலங்களின் ஒலிபெருக்கிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதில், சுமார் 35,000 ஒலிபெருக்கிகளின் ஓசைகள் குறைக்கப்பட்டதுடன் 11,000 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.

நாட்டின் மக்கள் தொகைகளில் மிக அதிகமான எண்ணிக்கையில் வாழும் பெரிய மாநிலங்களில் ஒன்று உத்தர பிரதேசம். இந்துக்களுடன் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்களும் இணைந்து வாழும் இம்மாநிலம் மதக்கலவரத்திற்கு பெயர் போனது. எனினும், கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் மதக்கலவரங்கள் கட்டுக்குள் அடங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. இச்சுழலில், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில மசூதிகளில் அஸான் எனும் பாங்கு முழக்கமிடும் ஒலிபெருக்கிகள் மூலம் பிரச்சினை எழுந்தது.

இச்சுழலில், உபியின் வாரணாசி, அலிகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் இந்த ஒலிபெருக்கிகளின் விதிமுறைகளை மீறும் ஓசைகள் விவகாரம் கிளம்பின. இப்பிரச்சினையில் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினர் பரஸ்பரம் எதிர், எதிராக அறிக்கை விடத் தொடங்கினர். இதனால், ஒலிபெருக்கிகள் விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதில், ’அனைத்து மதங்களுக்கான புனித தலங்களின் ஒலிபெருக்கிகளின் ஓசைகள் அதன் எல்லைகளை தாண்டக் கூடாது. இதற்கான சட்டங்களில் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேவைக்கு அதிகமாக விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும். இவற்றை, மாநிலம் முழுவதிலும் அப்பகுதி காவல் துறையினரால் சோதிக்கப்பட்டு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அரசிற்கு அறிக்கை அளிக்கப்பட வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு வாரத்திலும் அந்த ஒலிபெருக்கிகளின் ஓசைகள் கண்காணிக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து, உபி அரசின் இந்த உத்தரவு இடப்பட்ட 72 மணி நேரத்தில் அம்மாநிலக் காவல் துறையினரால் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மசூதி, கோயில் மற்றும் சீக்கியர்களின் குருத்துவாராக்கள் என எந்த மதத்தினரதும் விட்டு வைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த நடவடிக்கை ஏப்ரல் 30 வரை தொடர்கிறது. இதில், பிரதமரின் மக்களவை தொகுதியான வாரணாசி, முதல்வர் யோகியின் சொந்த மாவட்டமான கோரக்பூர் மற்றும் உபியின் தெய்வீக நகரமான மதுரா உள்ளிட்ட பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உபி மாநிலக் காவல் துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜியான பிரஷாந்த் குமார் கூறும்போது, "அனைத்து மதத் தலங்களின் ஒலிபெருக்கிகள் ஓசைகள் மீது நடைபெறும் சோதனைகளில் இதுவரை சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டதாக 10,923 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. இவைதவிர, 35,221 ஒலிபெருக்கிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மீறிய ஓசைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரச்சினை மீதான ஒரு வழக்கில் 2018-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த 40,000 கூட்டங்கள் காவல் துறையினரால் நடத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் சட்டப்படி, ஒலிபெருக்கிகள் தொழிற்சாலை பகுதிகளில், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 75 டெசிபிள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை 70 டெசிபிள் அளவிலான ஓசைகளுக்கு மட்டுமே அனுமதி. வர்த்தகப்பகுதிகளில் இந்த அளவு, பகலில் 55-ம், இரவில் 45 டெசிபிளும் அனுமதிக்கப்படுகிறது. இதுவே குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களில் 55 மற்றும் இரவில் 45 டெசிபிள் அளவிலும் ஒலிக்க அனுமதி உள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது ஐபிசி சட்டதிட்டங்களின் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளிக்கும் உரிமை அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதை பின்பற்றாமல் தற்போது நாட்டின் சட்டதிட்டங்களை கேலிசெய்யும் வகையில் போராட்டங்களும், எதிர்ப்புகளும் வலுப்பது வழக்கமாகி விட்டன. உபியில், இந்த ஒலிபெருக்கிகள் நடவடிக்கையில் இதுவரை ஒரு எதிர்ப்பும் எழவில்லை எனத் தெரிகிறது. இதற்கு ஒலிபெருக்கிகள் நடவடிக்கை, மசூதிகளில் மட்டும் அன்றி கோயில், குருத்துவாராக்களிலும் எடுக்கப்பட்டதுதான் காரணம். இது மட்டுமின்றி, பல கிராமங்களில் அரசு நடவடிக்கைகளுக்கு அஞ்சி உபி வாசிகள் தாமாகவே முன்வந்து பல ஆயிரக்கணக்கான ஒலிபெருக்கிகளை அகற்றிக் கொண்டனர். இதனால், உபி வரலாற்றில் முதன்முறையாக மதம் சார்ந்த இந்த நடவடிக்கை அமைதியான முறையில் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT