ரேஷன் அரிசி மூட்டை
ரேஷன் அரிசி மூட்டை  
தேசம்

வாகன சோதனையில் சிக்கிய 2 டன் ரேசன் அரிசி: கடத்திச் சென்றவர் கைது

காமதேனு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு ரேசன் அரிசி கடத்திய நபரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இதில் இரண்டு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. நியாய விலைக்கடைகளில் இலவசமாக வினியோகிக்கப்படும் ரேசன் அரிசியை குறைவான விலை கொடுத்து வாங்கி, அவற்றை சிலர் அதிக விலைக்கு அரவை மில்களுக்கு விற்றுவிடுகின்றனர். அங்கு பட்டை தீட்டப்படும் ரேசன் அரிசி கோழித் தீவனமாகவும் செல்கிறது. இதேபோல் கேரளத்திற்கும் தொடர்ந்து தமிழக ரேசன் அரிசிகள் கடத்தப்பட்டு வருகிறது. இதனாலேயே தென்மாவட்டங்களில் ரேசன் அரிசி கடத்தலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் போலீஸார் தீவிர ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு ரேசன் அரிசி கடத்துவதாக வந்த தகவலின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா எஸ்.ஐ சீனிவாசன் தலைமையிலான போலீஸார் கணேஷ்நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மினி லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். ஆட்டோவில் 2 டன் ரேசன் அரிசி இருந்தது. ஆட்டோவில் இருந்த மதுரையை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், மதுரை சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் விற்க ரேசன் அரிசியை கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக்கையும் கைது செய்ய போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் ரேசன் அரிசி உணவு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT