தேசம்

ரேசன் அரிசி கடத்தல் கும்பலை 27 கிமீ தூரம் துரத்திய அதிகாரிகள்: குமரியில் நடந்த திகில் சம்பவம்

காமதேனு

குமரியில் ரேசன் அரிசி கடத்திச் சென்ற சொகுசு காரை அதிகாரிகள் 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்று துரத்தி பிடித்த திகில் சம்பவம் இன்று நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு ரேசன் அரிசி கடத்துவது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரேசன் அரிசி கடத்தலை முற்றாகத் தவிர்க்கும்வகையில் போலீஸாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குமரி மாவட்டம், கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான அலுவலர்கள் திக்கணங்கோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்றைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தங்களது ஜீப்பில் அந்தக் காரைத் துரத்திச் சென்றனர்.

இங்கிருந்து சிறிது தொலைவில் அனுமதி இன்றி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என சோதனை செய்து கொண்டிருந்த கல்குளம் வட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தக் குழுவினரும் இவர்களோடு சேர்ந்து கொண்டனர். இரவிபுதூர்கடை, சுவாமியார்மடம், வேர்கிளம்பி வழியாக 27 கிலோ மீட்டர் தூரம் அந்த சொகுசுக்காரை பின் தொடர்ந்து சென்றனர். கண்ணனூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே சாமி ஊர்வலம் வந்தது. இதனால் அந்த சொகுசு காரை இயக்கமுடியாமல் ஓட்டுநரும் மற்றும் காரில் இருந்த இன்னொருவரும் காரை சாலையோரம் ஒதுக்கி நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். அதிகாரிகள் காரை சோதனை செய்துபார்த்த போது அதில் ஒரு டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. காரை பறிமுதல் செய்து, வட்ட வழங்கல் அலுவலகத்திற்கும், பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை உடையார்விளை அரசு குடோனுக்கும் கொண்டு சென்றனர்.

SCROLL FOR NEXT