அசோக் கெலாட்
அசோக் கெலாட் 
தேசம்

பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்: ராஜஸ்தான் அரசின் அசத்தல் அறிவிப்பு!

காமதேனு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 1.35 கோடி பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் அரசின் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 1.35 கோடி பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே இத்திட்டத்தை செயல்படுத்த மாநில காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. ரூ.12,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஏலம் புதன்கிழமை முதல் நடந்து வருகிறது.

நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த திட்டத்துக்கான ஏலத்தில் கலந்துகொண்டுள்ளன. டெண்டரை வழங்கிய தனியார் நிறுவனமான வோடபோன் ஏலத்தில் ஆஜராகவில்லை. உயர்மட்டக் குழு மதிப்பீட்டிற்குப் பிறகு இந்த மாதம் ஏலதாரர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று திட்ட பொறுப்பாளர் சத்ரபால் சிங் தெரிவித்தார். வரும் பண்டிகை காலம் தொடங்கும் முன்பே முதல் தவணை ஸ்மார்ட்போன்களை நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த ஆண்டு பட்ஜெட்டில் முதல்வர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 1.35 கோடி குடும்பங்களின் பெண் தலைவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு இணைய இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன. அரசு நிறுவனமான ராஜ்காம்ப் இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு வகிக்கிறது.

இந்த ஸ்மார்ட் மொபைல் இரண்டு சிம் அம்சத்தை கொண்டிருக்கும் என்றும், ஒரு சிம் ஏற்கனவே அதன் ‘பிரைமரி ஸ்லாட்டில்’ செயல்படுத்தப்பட்டு வரும், அதை மாற்ற முடியாது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநில அரசு பல்வேறு திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி வருகிறது.

SCROLL FOR NEXT