தேசம்

கடன் பொறியில் பஞ்சாப்: வெள்ளை அறிக்கை கவலை

ஆர்.என்.சர்மா

பஞ்சாப் மாநிலம் மிகப் பெரிய கடன் சுமையில் ஆழ்ந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் நிதி நிலைமையானது வெகுவிரைவில் மீள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறுகிறது. ஒரு காலத்தில் விவசாயம், தொழில் வளர்ச்சி இரண்டிலும் முன்னோடியாக இருந்த மாநிலம், நபர்வாரி வருமானத்தில் பிற மாநிலங்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு முன்னேறியிருந்தது. இப்போது மாநிலத்தின் நபர்வாரி வருவாய் வெகுவாகக் குறைந்து, பின்தங்கிய மாநிலங்கள் சிலவற்றுக்கு இணையாகப் பேசும் அளவுக்குக் கீழே இறங்கிவிட்டது.

பஞ்சாபில் புதிதாக ஆம்ஆத்மி கட்சி அரசு பதவிக்கு வந்திருக்கிறது. அதனால்தான் முந்தைய ஆட்சியைப் பற்றிய காட்டமான விமர்சனமாகவும் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. பகவந்த் சிங் மான் முதல்வராக இருக்கிறார். மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா நிதி நிலவரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை பஞ்சாப் பேரவையில் சனிக்கிழமை (25.06.2022) வெளியிட்டார். மாநில நிதி நிலை அறிக்கை இன்னும் இரண்டு நாள்களில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

வெள்ளை அறிக்கையின் சாரம் வருமாறு:

“மாநிலத்தின் நிதிநிலைமை மீள முடியாத அளவுக்கு பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. மிகப் பெரிய கடன் பொறியில் மாநிலம் சிக்கியிருக்கிறது. இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் (பாஜக-சிரோமணி அகாலிதளம் கூட்டணி, காங்கிரஸ் கட்சி) உரிய நேரத்தில் நிதிநிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால் மாநிலம் இந்த நிலைக்கு வந்திருக்காது. முந்தைய ஆட்சியாளர்கள் பயனற்ற திட்டங்களுக்கு நிறைய செலவிட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஊதாரித்தனமான செலவுகளும் கட்டுக்கடங்காமல் பெருகியிருந்தன. விலையில்லாத் திட்டங்கள், அளித்திருக்கவே வேண்டாத மானியங்கள் ஆகியவற்றால் நிதி நிலைமை மிக மோசமாகிவிட்டது. மூலதனம் இல்லாததால் சமூக வளர்ச்சிக்கான துறைகளில் செலவிட போதிய பணம் இப்போது இல்லை. இது இப்போதைக்கு மட்டுமல்ல எதிர்காலத்திலும் மாநிலம் வளர்ச்சி பெற முடியாதபடிக்குத் தடைக் கல்லாகவே நீடிக்கும். வரி வருவாயைப் பெருக்கும் வழிகளை மேலும் பயன்படுத்த முடியாது, வரியற்ற வருவாயும் பெருகாது. தொடர்ச்சியாக நிதி நிர்வாகத்தை அக்கறையில்லாமல் நடத்தியதன் விளைவை மாநிலம் இன்று எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மாநிலத்தின் இன்றைய ஒட்டுமொத்தக் கடன் சுமை 2.63 லட்சம் கோடியாகும். இது மாநிலத்தின் மொத்த ஆண்டு உற்பத்தி மதிப்பில் 45.88 சதவீதம்.

கடன் வாங்கியது மட்டுமல்லாமல் வாங்கிய கடனுக்குக் கட்ட வேண்டிய உடனடி தவணை, வட்டி ஆகியவற்றுக்குக் கூட செலுத்துவதற்கு நிதியை ஒதுக்காமல் விட்டுவிட்டது முந்தைய அரசு. புதிய அரசுக்கு முதல் பொறுப்பாக 24,351.20 கோடி கடன் தவணை, வட்டி இரண்டும் சேர்த்துச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஆண்டுதோறும் 7.60 சதவீதம் என்ற அளவில், 44.23 சதவீதத்துக்கு கடன் உயர்ந்திருக்கிறது. கடன் பொறியில் சிக்கிய மாநிலம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக பஞ்சாப் இருக்கிறது. பஞ்சாப் இனி புதிதாக திரட்டப்போகும் வருவாய் உள்பட அனைத்துமே ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு தவணை கட்டவும் வட்டி செலுத்தவுமே சரியாக இருக்கும். மாநில வளர்ச்சிக்கோ எதிர்காலத்துக்கோ எதையும் செய்ய முடியாது.

1980-81-ல் பஞ்சாபின் கடன் சுமை ரூ.1,009 கோடி. 2011-12-ல் அதுவே ரூ.83,099 கோடி. 2021-22-ல் ரூ.2,63,265 கோடி. நபர்வாரி வருமானத்தில் நாட்டிலேயே பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் இப்போது 11-வது இடத்துக்குச் சரிந்துவிட்டது.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் 2016 ஜனவரியில் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2021 ஜூலையில், சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகத்தான் அமல்படுத்தப்பட்டது. திருத்தப்பட்ட ஊதிய விகிதப்படியான நிலுவையைக் கூட வழங்கும் நிலையில் மாநில நிதிநிலைமை இல்லாததால் ரூ.13,759 கோடி சுமையை அந்த வகையில் புதிய அரசு மீது ஏற்றிவிட்டுச் சென்றிருக்கிறது முந்தைய அரசு.

பஞ்சாப் மாநிலம் மீண்டும் நிதி நிர்வாகத்தில் பழைய இடத்துக்கு வரவேண்டும் என்றால் அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். வருவாயை எல்லா வழிகளிலும் பெருக்கியாக வேண்டும். இதற்குக் கொள்கை முடிவுகள் மட்டும் போதாது, மாநிலத்தின் நிர்வாகக் கட்டமைப்பையும் மாற்றியாக வேண்டும்” என்கிறது வெள்ளை அறிக்கை.

இது பஞ்சாப் மாநிலத்தைப் பற்றியதாக இருந்தாலும் நாட்டின் பல மாநிலங்களில் இதுதான் நிலைமை. எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர வேண்டும் என்ற முனைப்பு காரணமாகவோ, நாம் எங்கே ஆட்சிக்கு வரப்போகிறோம், சும்மா சொல்லி வைப்போம் என்று நினைத்தோ அரசியல் கட்சிகள் தீர ஆராயாமல் தரும் பல வாக்குறுதிகள் கருவூலத்தைக் காலி செய்யவே உதவுகின்றன. நிதி நிர்வாகப் பொறுப்பு சட்டம் இயற்றப்பட்டும், வாங்கும் கடன் அளவை வரம்புக்குள் வைக்க மாநில அரசுகளால் முடியவில்லை. ரிசர்வ் வங்கியும் நிதிக்குழுவும் எச்சரிக்கை விடுப்பதுடன் மத்திய அரசும் கடன் வாங்க அனுமதி தர மறுக்கும்போது அதை மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கப் பார்ப்பதாக மாநிலங்கள் குற்றம்சாட்டுகின்றன.

மாநிலங்கள் வரி வருவாயைப் பெருக்குவதில் நேர்மை, சீர்மை ஆகியவற்றைக் கடைப்பிடித்தாலே அரசுக்கு வர வேண்டிய வருமானம் குறைவில்லாமல் கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் நிலைமையை மேம்படுத்தலாம். அரசு ஊழியர் பணியிடங்களில் காலியில்லாமல் நிரப்பியும் அதிகாரிகள் எண்ணிக்கையைக் குறைத்தும் சீரமைத்தாலே ஊதியம், படிகள் தொடர்பான செலவுகள் குறையும். எல்லா மாநில அரசுகளுமே நிதிநிலையை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தினால்தான் எதிர்காலத்தில் மாநிலங்கள் குறைந்தபட்சத் தேவைகளையாவது பூர்த்தி செய்துகொள்ள வழியேற்படும்.

SCROLL FOR NEXT